மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அமேதி மற்றும் ரே பரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? யார்? என்பதை இன்று கட்சி அறிவித்துவிட்டது.
அமேதி தொகுதியில் கிஷோரி லால் ஷர்மாவும், ரே பரேலி தொகுதியில் ராகுல் காந்தியும் போட்டியிடுவார்கள் என்று காங்கிரஸ் இன்று அறிவித்தது. இதையடுத்து ரே பரேலி தொகுதியில் ராகுல் இன்று வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் இந்தத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாளும்கூட. ராகுல், தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலிருந்தும் போட்டியிடுகிறார். இவர் வயநாடு தொகுதி எம்.பி. ஆவார்.
அமேதி தொகுதியிலிருந்து மூன்று முறை எம்.பி.யான ராகுல், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். இந்த முறை, அமேதியில் கே.எல். ஷர்மா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சரி.. ரே பரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது ஏன்? இது பல்வேறு தரப்பிலும் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் சாதுர்யமாக காய்நகர்த்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில், அமேதியை விடவும் ரே பரேலி தொகுதி ராகுல் வெற்றி பெற பாதுகாப்பான தொகுதி. இங்கு 1952க்குப் பிறகு காந்தி குடும்பத்தினர்தான் வெற்றிபெற்று வருகிறார்கள். ராகுல் காந்தியின் தாத்தா ஃபெரோஸ் காந்தி, பாட்டி இந்திரா காந்தி, தாய் சோனியா என அனைவரும் இங்கு போட்டியிட்டுள்ளனர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கணவர் ஃபெரோஸ் காந்தி, 1952 தேர்தலில் முதல் முறையாக வென்றார். பிறகு 1957லும் வெற்றி பெற்றார். பிறகு 1967 - 77 வரை இந்திரா காந்தி இந்த தொகுதி எம்.பி.யாக இருந்தார். 1980ஆம் ஆண்டு இந்திரா ரே பரேலி மற்றும் ஆந்திரத்தின் மேடக் தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார்.
அவர் அப்போது ரே பரேலி தொகுதியில் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மேடக் தொகுதியை தக்கவைத்துக்கொண்டார். பிறகு காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான அருண் நேரு, ஷீலா கௌல், கேப்டன் சதீஷ் ஷர்மா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். பிறகு 2004ல் சோனியா போட்டியிட்டு வென்றார். 2019 வரை இந்த தொகுதியில் சோனியாவே போட்டியிட்டார்.
சரி, அமேதியை விட்டுவிட்டு ரே பரேலியில் ராகுல் போட்டியிடக் காரணம் பற்றி பேசுகையில், அமேதியில் ராகுல் போட்டியிட்டால், இங்கு மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டியது இருக்கும். ராகுல் - ஸ்மிருதி என போட்டி இருக்கும். காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வது குறையும். ஆனால் ரே பரேலி பாதுகாப்பான சீட். எனவே, இங்கு போட்டியிடுவதால் பல தொகுதிகளுக்கும் ராகுல் சென்று பிரசாரம் செய்யலாம் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் தலைவர் ஒருவர்.
இந்த ரே பரேலி தொகுதியில் காங்கிரஸ் ஒரு முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது. அதுவும் 1977ஆம் ஆண்டு அவசரநிலை பிரகடனத்துக்குப் பிறகுதான். அப்போதுதான் ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜ் நரைன், இந்திரா காந்தியை தோற்கடித்தார். அப்போது இந்திரா பிரதமராகவும் இருந்தார்.
ராகுல் ரே பரேலியில் போட்டி ஏன்?
அமேதி தொகுதியில் கடந்த 2019 தேர்தலில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் தோல்வியடைந்தார். எனவே, ரே பரேலி தொகுதி வரலாற்று மற்றும் உணர்வுப்பூர்வமாக ராகுல் போட்டியிட சரியானத் தொகுதியாக இருக்கும் என்று கட்சித் தலைமையால் கணிக்கப்பட்டுள்ளது.
ரே பரேலி எம்.பி.யாக இருந்த சோனியா, தற்போது மாநிலங்களவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 77 வயதாகும் சோனியா, உடல்நிலை கருதி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்திருந்தார். அப்போதே அவர் ஒரு தகவலையும் சொல்லியிருந்தார். ரே பரேலி வாக்காளர்கள் தனக்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி, எதிர்காலத்திலும் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம், அவரது குடும்பத்திலிருந்து ஒருவர் ரே பரேலியில் போட்டியிடுவார் என்பதை சோனியா அப்போதே சொல்லிவிட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே, மிகச் சரியாக கணித்துத்தான் காங்கிரஸ் காய்நகர்த்தி வருகிறது என்பதே அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்தாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.