படம் | பி.டி.ஐ
இந்தியா

மேற்கு வங்கத்தில் பாஜக அலை வீசுமா? நட்சத்திர வேட்பாளர்களிடையே போட்டி

நட்சத்திர வேட்பாளர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் 4-ஆம் கட்ட தேர்தல்!

Muthuraja Ramanathan

மேற்கு வங்கத்தில் 8 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் பரம்பூர், கிருஷ்ணாநகர், ரனாகாட் (எஸ்சி), பர்தமான் பூர்பா (எஸ்சி), பர்தமான்-துர்காபூர், அசன்சோல், போல்பூர் (எஸ்சி) மற்றும் பிர்பூம் ஆகிய 8 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகனும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜி ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்ட பிரசாரங்களை நடத்தியுள்ளனர்.

இங்குள்ள 8 தொகுதிகளில் 71 லட்சத்து 45 ஆயிரத்து 379 பெண்கள், 282 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்பட மொத்தம் 1 கோடியே 45 லட்சத்து 30 ஆயிரத்து 17 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

4 ஆவது கட்டமாக திங்கள்கிழமை நடைபெறும் தேர்தலில் பல நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நட்சத்திர வேட்பாளர்களாக காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, திரிணமூல் காங்கிரஸின் சத்ருகன் சின்ஹா, மஹுவா மொய்த்ரா, யூசுப் பதான், பாஜகவின் எஸ்.எஸ்.அலுவாலியா, திலீப் கோஷ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா, பாஜகவின் மூத்த தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியாவை எதிர்த்து அசன்சோல் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

கடந்த டிசம்பரில் மக்களவையில் இருந்து வெளியேற்றப்பட்ட திரிணமூல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ராவை, கிருஷ்ணாநகர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பாஜகவின் அம்ரிதா ராய்க்கு எதிராக கிருஷ்ணாநகரில் அக்கட்சி நிறுத்தியுள்ளது.

பசு கடத்தல் வழக்கில் திகார் சிறையில் இருந்த திரிணமூல் காங்கிரஸின் அனுப்ரதா மோண்டல், வங்காள சினிமா பிரபலம் சதாப்தி ராய் ஆகியோர் பிர்பூம் தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடுகின்றனர்.

பல்வேறு விவகாரங்களில் மம்தா பானர்ஜிக்கு சர்ச்சைக்குரிய கருத்துகளால் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த பாஜகவின் முன்னாள் மேற்கு வங்கத் தலைவர் திலீப் கோஷ் துர்காபூரில் போட்டியிடுகிறார். 2019 இல் அவர் காரக்பூரில் பாஜக சார்பில் வெற்றி பெற்றிருந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுக்ரிதி கோசலுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிர்த்தி ஆசாத்தை நிறுத்தியுள்ளார் மம்தா.

மட்டுவா சமூகத்தினரை கணிசமாகக் கொண்ட ரனாகாட் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் பாஜகவின் ஜெகநாத் சர்க்கார். ரானகாட் வேட்பாளர் ஆக பாஜகவில் எம்.எல்.ஏவாக இருந்து விலகிய முகுத் மணி அதிகாரியை திரிணமூல் காங்கிரஸ் நிறுத்தியுள்ளது.

போல்பூரில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரான அசித் குமார் மால், பாஜகவின் பிரியா சாஹா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் ஷியாமலி பிரதான் ஆகியோரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

பர்தமான் புர்பாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிரவ் கா, பாஜக வேட்பாளர் ’நாட்டுப்புற பாடகர் ஆஷிம் குமார் சர்க்கார்’ ஆகியோருக்கு எதிராக மனநல மருத்துவர் ஷர்மிளா சர்க்காரை திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைகள், குடிநீர் விநியோகம் மற்றும் தொழிற்சாலைகள் இல்லாமை போன்றவை அங்குள்ள வாக்காளர்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளாக உள்ளன.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) அறிவிப்பு, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 4, பாஜக 3, காங்கிரஸ்(ஆதிர் ரஞ்ஜன் சௌத்ரி) 1 இடத்தையும் பிடித்தது.

அதனைத்தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 47.5 சதவீதம் வாக்குகளைப் பெற்று திரிணமூல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. பாஜக 39.5 சதவீதம், மார்க்சிஸ்ட் 5.5 சதவீதம், காங்கிரஸ் 3 சதவீதம் வாக்குகளையும் பெற்றிருந்தன.

நாளை(மே. 12) வாக்குப்பதிவு நடைபெறும் 8 தொகுதிகளில், 7இல் பாஜகவுக்கும் திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையே தான் இருமுனைப் போட்டி நிலவுகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரஸும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதே தவிர வெற்றி பெற இயலாது என தேர்தல் நிபுணர்கள் களத்திலிருந்து தெரிவிக்கின்றனர்.

ஆனால், பரம்பூர் தொகுதியில் மட்டும் காங்கிரஸ், பாஜக, திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கடந்த 30 வருடங்களாக தனது கோட்டையாகக் கருதப்படும் பரம்பூரில் தொடர்ந்து 6 ஆவது முறையாகப் போட்டியிடுவதே மும்முனைப் போட்டிக்கு காரணம்.ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மற்றும் பாஜகவின் நிர்மல் குமார் சாஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அசல்சோர், ரனகாட், துர்காபூர் ஆகிய 3 மக்களவை தொகுதிகளில் பாஜக கடந்த முறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இம்முறை அந்த தொகுதிகளை தக்க வைக்குமா என்பது கேள்விக்குறியே?

மேற்கு வங்கத்தில் பாஜக அலை வீசுமா அல்லது முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வாக்காளர்கள் பச்சைக்கொடி காட்டுவார்களா? இந்தியா கூட்டணி பக்கம் வாக்காளர்கள் சாய்வார்களா? எனபதற்கான விடை ஜூன்-4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பின் தெரிந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

“வண்டிய நிறுத்துங்க..!” மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்! பயணிகள் சாலை மறியல்!

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 8

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 7

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT