ஆந்திர பேரவைத் தேர்தல்: காலையிலேயே வந்து வாக்களித்த ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு
காலையிலேயே வந்து வாக்களித்தனர் ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு
அமராவதி: மக்களவை தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவுடன் ஆந்திரம் மற்றும் ஒடிஸா பேரவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவும் இன்று காலை தொடங்கியது.
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகயோர் அவர்களது குடும்பத்தினருடன் இன்று காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகறை செலுத்தினர்.
நாட்டில் உள்ள 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நான்காம் கட்ட தேர்தலில் 1,717 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி 92 வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. பாஜக 70, காங்கிரஸ் 61 மற்றும் ஓய்எஸ்ஆர் கட்சி 25 இடங்களிலும் போட்டியிடுகிறது.
ஜெகன்மோகன் ரெட்டி, கடப்பா மாவட்டம் புலிவெண்டுலா தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இன்று தனது வாக்கினை செலுத்தினார். அமராவதியில் சந்திரபாபு நாயுடு தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.
பேரவைத் தேர்தல் களத்தில் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உள்ளிட்டோர் உள்ளனர். மக்களவைத் தேர்தல் களத்தில் ஒய்.எஸ். ஷர்மிளா, டி. புரந்தேஸ்வரி உள்ளிட்டோர் உள்ளனர்.
இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு தொடர்ச்சியாக மாலை 6 மணி வரை நடைபெறும். சில இடங்களில் மட்டும் 1 அல்லது 2 மணி நேரம் முன்கூட்டியே வாக்குப்பதிவு நிறைவுபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா- 17, ஆந்திர பிரதேசம்-25, மத்திய பிரதேசம்- 8, உத்தரப் பிரதேசம்- 13, மகாராஷ்டிரா- 11, மேற்கு வங்கம்-8, பிஹார்-5, ஜார்க்கண்ட்- 4, ஒடிசா- 4 மற்றும் ஜம்மு காஷ்மீர்- 1 ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
நான்காம் கட்டம் முடிவுற்றால் ஒட்டுமொத்தமாக 379 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்துவிடும். வாக்கு எண்ணிக்கை ஜுன் 4 அன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.