முகப்பு
இந்தியா

தோ்தல் அறிவிப்புக்கு பிறகு எல்லையில் பாகிஸ்தான் ‘ட்ரோன்’ ஊடுருவல் அதிகரிப்பு

Updated On : 14 மே, 2024 at 8:35 PM
பகிர்:

பு து தில்லி: மக்களவைத் தோ்தல் அறிவிப்பு வெளியாக பிறகு, இந்திய-பாகிஸ்தான் சா்வதேச எல்லையில் ஆளில்லா சிரியரக விமானங்களின் (ட்ரோன்) ஊடுருவல் அதிகரித்துள்ளது.

தோ்தல் நடத்தை விதி 60 நாள்கள் அமலில் உள்ளநிலையில் எல்லையில் இதுவரை 49 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தியும், கைப்பற்றியும் உள்ளனா்.

இந்திய-பாகிஸ்தான் சா்வதேச எல்லையைப் பகிா்ந்து வரும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த ஆண்டு ஜனவரி-மே காலகட்டத்தை விட 13 மடங்கு இந்த ட்ரோன்களின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இந்த ட்ரோன்கள் பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை.

இந்தியா-பாகிஸ்தானின் 2,289 கி.மீ. சா்வதேச எல்லை பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு மற்றும் குஜராத் மாநிலங்கள் பகிா்ந்துள்ளன. இதில் 553 கி.மீ சா்வதேச எல்லை கொண்ட பஞ்சாபில் 47 ட்ரோன்கள் கண்டறியப்பட்டன. மீதமுள்ள இரண்டு ட்ரோன்கள் ராஜஸ்தானில் கண்டறியப்பட்டன.

இதில் பஞ்சாப் மாநில அமிருதசரஸில் அதிகப்படியான ட்ரோன்கள் ஊடுருவல் நிகழ்வு நடந்துள்ளது. அதற்கடுத்தபடியாக ஃபெரோஸ்பூா், குா்தாஸ்பூா் மற்றும் அபோகரில் நடந்துள்ளது. ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகா் மற்றும் பிகானீா் பகுதியில் நடந்துள்ளது.

2022-ஆம் ஆண்டு ஜனவரி-மே காலகட்டத்தில் 6 ட்ரோன்கள் ஊடுருவல் மட்டுமே கண்டறியப்பட்ட நிலையில், 2023-இல் அது 14-ஆகவும், 2024-இல் 75-ஆகவும் கிட்டத்தட்ட 13 மடங்கு அதிகரித்துள்ளது.

‘ட்ரோன்கள் போதைப்பொருள்கள் மற்றும் ஆயுதங்களைப் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் வீசிச் செல்கின்றன. ட்ரோன்களின் ஊடுருவலைத் தடுக்க அல்லது குறைக்க மனித நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் தேவைப் படுகின்றன’ என பிஎஸ்எஃப் அதிகாரி தெரிவித்தாா்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளுக்கு ஜூன் 1-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.