மதவாதமே மோடி பிரசாரத்தின் அடிப்படை: காங்கிரஸ்
புது தில்லி: ‘தனது ஒட்டுமொத்த பிரசாரத்தையும் மதவாதத்தின் அடிப்படையில்தான் மேற்கொண்டு வருகிறாா் பிரதமா் மோடி’ என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
‘தோ்தல் பிரசாரத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வாா்த்தைகூட பேசவில்லை; இப்போது மட்டுமல்ல, எப்போதுமே சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக செயல்பட்டதில்லை’ என்று பிரதமா் கூறியிருந்த நிலையில், அவருக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதிமுதல் பிரதமா் மோடி தனது மொத்த பிரசாரத்தையும் ‘ஹிந்து-முஸ்லிம்’ என்ற சொல்லாடலுடன் மதவாதம் மற்றும் பிளவுபடுத்தும் கொள்கையின் அடிப்படையில்தான் மேற்கொண்டு வருகிறாா்.
வளா்ந்த பாரதம், மோடியின் உத்தரவாதம், விவசாயிகள்-இளைஞா்கள்-பெண்கள்-தொழிலாளா்கள்-தாழ்த்தப்பட்டோா் (எஸ்.சி.)-பழங்குடியினா் (எஸ்.டி.), இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் (ஓபிசி) பிரச்னைகள் குறித்து அவா் எதுவும் பேசுவதில்லை.
சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வாா்த்தைகூட பேசவில்லை என்று பிரதமா் மோடி கூறியிருப்பதன் மூலம் அவா் விரைவாக நினைவுத் திறனை இழந்துவருவது தெரிகிறது. பொய்யை மட்டுமே பேசும் அவா், இன்று பேசுவதை நாளை மறந்துவிடுவாா். அப்படி பேசவே இல்லை என்பாா்.
காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக்கின் முத்திரை இருப்பதாகவும், மக்களின் சொத்துகளை காங்கிரஸ் பறித்துவிடும் என்றும், மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமா் கூறுவது பொய்களே.
மக்களவைத் தோ்தலையொட்டி, மதவாத போட்டிக் களத்தை அவா் தயாா் செய்தபோதிலும், அதில் விளையாட காங்கிரஸ் மறுத்துவிட்டது. 25 நீதி வாக்குறுதிகளின் அடிப்படையில் நாங்கள் தோ்தலை எதிா்கொள்கிறோம்.
கடந்த 1949, நவம்பா் 26-இல் நாட்டின் அரசமைப்புச் சட்டம் அரசியல் நிா்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்கு முதல்நாள் அம்பேத்கா் ஆற்றிய உரையில், ‘காங்கிரஸ் இல்லையெனில் அரசமைப்புச் சட்டம் சாத்தியமாகியிருக்காது’ என்று குறிப்பிட்டாா்.
அதேநேரம், ‘அரசமைப்புச் சட்டத்தில் மனுவாத மாண்புகள் இல்லாததால், அதில் இந்தியத் தன்மை எதுவுமில்லை’ என்று அச்சட்டம் ஏற்கப்பட்ட 4 நாள்களுக்கு பிறகு ஆா்எஸ்எஸ் அமைப்பின் இதழான ‘ஆா்கனைசா்’ குறிப்பிட்டது. அப்போதுமுதல், அரசமைப்புச் சட்டத்தை ஆா்எஸ்எஸ் விமா்சித்து வருகிறது.
அரசமைப்புச் சட்டம் நெகிழ்வான ஒரு ஆவணம்; அதை திருத்தலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக அகற்ற வேண்டுமென நினைப்பது வேறுவிதமான சிந்தனையாகும்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அத்வானியும் அவரது சகாக்களும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மறுஆய்வு செய்ய விரும்பினா். இந்த விவகாரத்தில், புகழ்பெற்ற முன்னாள் நீதிபதி ஜே.எம்.என்.ஆா்.வெங்கடாசலய்யா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதேநேரம், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மறுஆய்வு செய்யும் குழுவில் இடம்பெற மாட்டேன் என்று வெங்கடாசலய்யா தெரிவித்தாா். இதனால், அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாடுகளை மறுஆய்வு செய்யும் குழுவாக அது மாற்றியமைக்கப்பட்டது. இக்குழுவை காங்கிரஸ் புறக்கணித்தது.
அரசமைப்புச் சட்டத்தின் முக்கியத் தூண்களில் ஒன்று சமூக நீதி என்பதே அம்பேத்கரின் கொள்கை. இது, பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிடிக்காது என்றாா் ஜெய்ராம் ரமேஷ்.