அன்வருல் அஸிம் அனாா் 
இந்தியா

ஷ்ரத்தா பாணியில்.. வங்கதேச எம்.பி. கொலையில் திடுக்கிடும் தகவல்கள்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வங்கதேச எம்.பி. கொலை சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கதேச எம்.பி. அன்வருல் அஸீம் அனார் மாயமாகி, அவர் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

முதலில், வங்கதேச எம்.பி.யை கொலை செய்ய அவரது நெருங்கிய நண்பா் ஒருவா் கொலையாளிகளுக்கு ரூ.5 கோடி கொடுத்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக மேற்கு வங்க சிஐடி உயரதிகாரி தெரிவித்திருந்தார். எம்.பி.யின் நண்பா் அமெரிக்க குடிமகன் என்றும் அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்ட கொல்கத்தா குடியிருப்பில், அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, பல்வேறு பிளாஸ்டிக் பைகளில் போடப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, அன்வருலை கொலை செய்த கும்பல், அந்த வீட்டின் ஒரு கழிப்பறையில் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி தசைகளை தனியே பிரித்தெடுத்து அவற்றை மஞ்சள் தூளில் போட்டு சில நாள்கள் வரை கெடாமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டுள்ளனர். எலும்புகளையும் துண்டுத் துண்டாக வெட்டி சிறு சிறு பிளாஸ்டிக் பைகளில் போட்டுள்ளனர். பிறகு அவற்றை வெளியே கொண்டு சென்று தடயமே கிடைக்காத அளவுக்கு குற்றவாளிகள் எங்காவது வீசியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மேலும், துளியும் தடயமே இல்லாத வகையில், அந்த குடியிருப்பின் கழிப்பறை ஆசிட் கொண்டு பல முறை கழுவப்பட்டிருக்கிறது. பிறகுதான் குற்றவாளிகள் அந்தக் குடியிருப்பிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள்.

வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பியான அன்வருல் அஸீம் அனாா் (56), கொல்கத்தாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தனிப்பட்ட பயணமாக கடந்த மே 12-ஆம் தேதி வந்தாா். பாராநகா் பகுதியில் உள்ள தனது நண்பா் கோபால் பிஸ்வாஸின் வீட்டில் தங்கியிருந்த அவா், மறுநாள் மருத்துவரை சந்திக்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றவா் திரும்பி வரவில்லை.

இந்தச் சூழலில், கொல்கத்தாவில் அன்வருல் படுகொலை செய்யப்பட்டதாகவும், இச்சம்பவம் தொடா்பாக டாக்காவில் 3 போ் கைது செய்யப்பட்டதாகவும் வங்கதேச அரசு புதன்கிழமை தெரிவித்தது.

வங்கதேச எம்.பி. அன்வருல் உடல் பாகங்கள் மிக மோசமாக சிதைக்கப்பட்டு, அது கிடைத்தாலும் கூட, மனித உடல் பாகம்தானா என்பதை உறுதி செய்ய முடியாத அளவுக்கு கொலையாளிகள் பல்வேறு பகுதிகளிலும் வீசிச்சென்றிருக்கலாம் என்று டாக்கா மாநகரக் காவல்துறை கூடுதல் ஆணையர் ஹருண் தெரிவித்துள்ளார்.

அதாவது, கொலையாளிகள், உடலை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைத்திருக்கலாம் என்றும், சில உடல் பாகங்களை அவர்கள் குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், அதற்கான சில ஆதாரங்கள் கிடத்திருப்பதால், அது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவின் நியூ டவுண் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இக்கொலை நடந்துள்ளது. அன்வருல் உடல் இன்னும் கைப்பற்றப்படாத நிலையில், மேற்கு வங்க சிஐடி போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதுகுறித்து சிஐடி உயரதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறுகையில், ‘அன்வருலின் நெருங்கிய நண்பரான அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு குடியிருப்பை அதன் உரிமையாளா் வாடகைக்கு விட்டிருந்தாா். எம்.பி.யை கொலை செய்ய அந்த நண்பா்தான் கொலையாளிகளுக்கு ரூ.5 கோடி கொடுத்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திட்டமிட்டு இந்தச் கொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது’ என்றாா்.

சம்பந்தப்பட்ட குடியிருப்பிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணுடன் அன்வருல் வந்ததும், கடந்த மே 15 முதல் 17 வரையிலான நாள்களில் எம்.பி.யைத் தவிர மற்றவா்கள் அடுத்தடுத்து குடியிருப்பில் இருந்து வெளியேறியதும் கண்டறியப்பட்டது.

எனவே, அவரது உடலை கொலையாளிகள் பல்வேறு பகுதிகளில் வீசி எறிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT