மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில், 30 வயது நபர் ஒருவர், பேராசிரியை போல குரல் மாற்றும் செயலி மூலம் கல்வி உதவித் தொகை பெற்றுத் தருவதாகக்க் கூறி 7 பழங்குடியின சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், பிரஜேஷ் பிரஜாபதி என்ற குற்றவாளியை கைது செய்துள்ளோம். அவருக்கு உதவியதாக மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செல்போன்களில் குரல்களை மாற்றும் செயலியை பதிவிறக்கம் செய்த குற்றவாளி, கல்லூரி பேராசிரியை போல குரலை மாற்றிப் பேசி, இந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவருமே பழங்குடியினத்தைச் சேர்ந்த மிகவும் வறுமைநிலையில் உள்ளவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 4 சிறுமிகள்மட்டும்தான் தைரியமாக முன்வந்து புகார் அளித்தனர். குற்றவாளியிடம் நடத்திய விசாரணையில்தான் மேலும் 3 சிறுமிகளை வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இவருக்கு எதிராக போக்சோ சட்டப்பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளது.
கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து, முதல் மாணவியின் செல்போனை பெற்று அவரிடம் பேராசிரியை போல பேசியுள்ளார். மாணவியை செல்போனில் அழைத்து, கல்வி உதவித் தொகை வழங்கும் இடத்துக்கு எனது மகன் அழைத்துச் செல்வார் என்று கூறி, அப்பெண்ணை ஆள் நடமாட்டமில்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்து, அவரிடமிருந்து செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டுள்ளார்.
பிறகு, அந்த செல்போனில் இருந்த மற்ற சிறுமிகளின் எண்களுக்கும் தொடர்பு கொண்டு இது போல பேசி வன்கொடுமை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் முதல் நடந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தபோதுதான் இது வெளிச்சத்துக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.