தேர்தல் பத்திரத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால் மக்களவைத் தேர்தலில் கருப்புப் பணத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்று நம்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் நன்கொடை பத்திரத் திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் மாற்று வழி குறித்து முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துடனான நேர்காணலின்போது, தேர்தல் நன்கொடை பத்திரத் திட்டத்தை மக்களவைத் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்னதாக உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அமித் ஷா பதிலளித்தார்.
அந்த கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா கூறியதாவது:
“இதன்மூலம் மக்களவைத் தேர்தலில் கருப்புப் பணத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த நிதியாண்டில் அரசியல் கட்சிகள் தங்கள் கணக்கை சமர்ப்பிக்கும்போது, ரொக்க நன்கொடை எவ்வளவு, காசோலை மூலம் பெறப்பட்ட நன்கொடை எவ்வளவு என்பது தெரிய வரும். தேர்தல் பத்திரம் நடைமுறையில் இருக்கும்போது 96 சதவிகிதம் நன்கொடை காசோலை மூலம் தான் பெறப்பட்டது.
தற்போது நீங்கள் அறிவீர்கள். கருப்புப் பணத்தின் தாக்கம் அதிகரித்தால், அதற்கு மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டும்.” என்றார்.
மக்களவைத் தேர்தலில் கருப்புப் பண புழக்கம் அதிகரித்துள்ளதாக நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, அப்படிதான் நினைக்கிறேன் என்று அமித் ஷா பதிலளித்துள்ளார்.
மேலும், “இதுகுறித்து அனைத்துக் கட்சிகளுடன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தின் பார்வையும் மிக முக்கியமானது. அட்டர்னி ஜெனரல் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். கூட்டாக ஆலோசித்து புதிய வழியை முடிவு செய்ய வேண்டும்.” என்று அமித் ஷா தெரிவித்தார்.
தேர்தல் நன்கொடை பத்திரத் திட்டமானது, தகவல் அறியும் உரிமைச் சட்டம், பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாக கூறி பிப்ரவரி மாதம் அதனை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், நன்கொடையாளர்கள் மற்றும் பயனாளிகளின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.