கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள உணவகத்தில் 'குழிமந்தி' பிரியாணி சாப்பிட்ட பெண் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு பலியானார்.
இதுகுறித்து பெரிஞ்சனத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர் அப்துல் நாசர் கூறுகையில், '' பெரிஞ்சனம் பகுதியைச் சேர்ந்த நுசைபாவுக்கு (56) சனிக்கிழமை இரவு ஒரு உணவகத்தில் 'குழிமந்தி' பிரியாணி சாப்பிட்டபின் உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இரிஞ்சாலக்குடா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். திருச்சூரில் சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
நுசைபாவின் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல் நிலை சீராக உள்ளது'' என்றார்.
பெரிஞ்சனத்தில் உள்ள ஜெய்ன் உணவகத்தில் இருந்து கெட்டுப்போன 'குழிமந்தி' பிரியாணி சாப்பிட்ட 185 பேர் உணவு நஞ்சாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட 185 பேரில், 30 பேர் திருச்சூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சுகாதார மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் உணவுப் பொருள்களின் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.