வட இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வெப்பம் தாங்க முடியாமல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
கேரளம், வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், தலைநகர் புதுதில்லி உள்பட வட மாநிலங்களில் கடந்த வாரங்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகி வருகிறது.
இந்தநிலையில் இன்று காலை நிலவரப்படி, கிழக்கு மற்றும் வட இந்தியாவில் கடுமையாக வீசும் வெப்ப அலைக்கு இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்ச வெப்பநிலை ராஜஸ்தான், ஹரியாணா, சண்டீகர், தில்லி, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், ஒடிசா, கிழக்கு மத்தியப் பிரதேசத்தில் 45 முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை இன்று வெப்பநிலை பதிவாகும்.
மேற்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கடலோர ஆந்திரப் பிரதேசம், யானம், குஜராத், தெலங்கானா மற்றும் ராயலசீமாவின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 42-45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். இவை வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் இயல்பை விட 3-6 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
மேலும், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், தில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மே 31, ஜூன் 1ஆம் தேதிகளில் கடுமையான வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.
ஐஎம்டி கூற்றுப்படி, தில்லியின் அதிகபட்ச வெப்பநிலை 45.6 டிகிரி செல்சியஸ் இருக்கும். இது இயல்பை விட 5.2 டிகிரி அதிகமாக பதிவாகும். தலைநகரில் 79 ஆண்டுகளில் அதிகபட்சமாக 46.8 டிகிரி செல்சியஸ் இன்று பதிவாகியுள்ளது. அதேசமயம் இன்று தில்லியில் புழுதிபுயல் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகாரில் 20 பேர் வெப்பத் தாக்குதலுக்கு இறந்தனர், அவர்களில் 12 பேர் அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர்கள், அர்ராவில் 6, பக்சரில் 2 மற்றும் ஒடிசாவின் ரூர்கேலாவில் 10 பேர் உயிரிழந்தனர். ஜார்க்கண்டின் பலமு, ராஜஸ்தானில் தலா 5 பேரும், உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூரில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். முன்னதாக, பிகார் மாநிலம் தர்பங்காவைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.
இதனிடையே, ஜூன் 2 வரை வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.