பிஆர்எஸ் ஆட்சியின் தவறுகளை காங். மூடி மறைக்கிறதா? : தெலங்கானா பாஜக!
பிஆர்எஸ் ஆட்சியின் தவறுகளை காங்கிரஸ் மூடி மறைக்கிறது: தெலங்கானா பாஜக போராட்டம்
ஹைதராபாத்: தெலங்கானாவில் முந்தைய பிஆர்எஸ் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களின் அலைபேசியை ஒட்டுக்கேட்கக் குழு அமைத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த மாநில பாஜக அணி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
பாஜக தலைவர் எம்.பி. கே. லக்ஷமண் உள்ளிட்டோர் இந்திரா பூங்காவில் காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வழக்கில் முன்னாள் காவல் அதிகாரி மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட மூன்று காவலர்கள் வாக்குமூலம் வெளிச்சத்துக்கு வந்த பிறகும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் காங்கிரஸ் பிஆர்எஸ் கட்சியின் தவறுகளை மூடி மறைக்க உதவுகிறதா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர்கள், சொந்த கட்சியிலேயே எதிரணியாக இருப்பவர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும் இதற்கென சிறப்பு புலனாய்வு குழு பிஆர்எஸ் ஆட்சியில் அமைக்கப்பட்டதாகவும் வாக்குமூலத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டுமென எம்.பி.லக்ஷ்மண் கோரிக்கை வைத்துள்ளார்.