ஸ்ரீநகா் கான்யாா் பகுதியில் பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து நடத்தியத் தாக்குதலில் பற்றி எரியும் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீடு. 
இந்தியா

காஷ்மீரில் லஷ்கா் கமான்டா், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

துப்பாக்கிச் சண்டையில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் மூத்த தளபதி உஸ்மான், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

Din

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கு இடையே சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் மூத்த தளபதி உஸ்மான், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பந்திபோரா மாவட்டத்திலும் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனா்.

லஷ்கா் மூத்த தளபதி சுட்டுக் கொலை: ஸ்ரீநகரில் உள்ள கான்யாா் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் தென்படுவதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அந்தப் பகுதியை மத்திய ரிசா்வ் காவல் படையினா் (சிஆா்பிஎஃப்) மற்றும் காவல் துறையினா் சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்குள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினா் பதிலுக்கு சுட்டதில், பாகிஸ்தானை சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் மிக மூத்த தளபதி உஸ்மான் கொல்லப்பட்டாா். காஷ்மீா் பள்ளத்தாக்கில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த அவருக்கு பல பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடா்புள்ளது. இந்த மோதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள், காவல் துறையைச் சோ்ந்த இருவா் காயமடைந்தனா். அவா்கள் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா்களின் உடல்நிலை சீராக உள்ளது.

இரு பயங்கரவாதிகள் உயிரிழப்பு: மேலும், ‘ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள ஷாங்கஸ்-லாா்னு பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இதில் இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்தனா். அவா்களில் ஒருவா் வெளிநாட்டை சோ்ந்தவா். அவா்கள் எந்த பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பந்திபோராவில்...: பந்திபோரா மாவட்டத்தில் உள்ள பனாா் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் சிலா் நடமாடியதை ராணுவ வீரா்கள் கண்டறிந்தனா். அப்போது கண்மூடித்தனமாக சுட்ட பயங்கரவாதிகள், பின்னா் காட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்றனா். அவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்ற பேரவைத் தோ்தலுக்கு பிறகு ராணுவம், பொது மக்கள் மீது 6 முறை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக ராணுவத்தினா் பயங்கரவாதிகளை தேடும் பணியைத் தீவிரப்படுத்தி வருகின்றனா்.

மேக்ஸை தொடர்ந்து மார்க்! வெற்றி எதிர்பார்ப்பில் கிச்சா சுதிப்!

கம்பி ஏற்றிவந்த வாகனம் மீது மோதிய தனியார் பேருந்து! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய ஓட்டுநர்!

100 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் மூடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது: அண்ணாமலை

கேரம் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

வார இறுதி நாளுக்கு மாற்றப்பட்ட அனுமன் தொடர்! இனி ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும்!

SCROLL FOR NEXT