முகப்பு
இந்தியா

ஹிமாசல் காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு- மல்லிகாா்ஜுன காா்கே அதிரடி நடவடிக்கை

காங்கிரஸ் ஆளும் ஹிமாசல பிரதேசத்தில் அக்கட்சியின் மாநிலக் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட்டது.

Updated On : 6 நவம்பர், 2024 at 7:59 PM
மல்லிகாா்ஜுன காா்கே
பகிர்:

காங்கிரஸ் ஆளும் ஹிமாசல பிரதேசத்தில் அக்கட்சியின் மாநிலக் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட்டது.

அத்துடன், காங்கிரஸின் மாவட்ட மற்றும் வட்டாரக் குழுக்களையும் கலைத்து, கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை நடவடிக்கை மேற்கொண்டாா்.

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்தி, காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக சுக்விந்தா் சிங் சுக்கு பதவி வகித்து வருகிறாா். கட்சியின் மாநிலத் தலைவராக மறைந்த முன்னாள் முதல்வா் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங் உள்ளாா்.

கடந்த 2022-இல் இப்பதவியை ஏற்ற இவா், காங்கிரஸ் செயற்குழுவிலும் இடம்பெற்றுள்ளாா்.

இந்தச் சூழலில், உள்கட்சி பூசல்களால் ஹிமாசல பிரதேச காங்கிரஸ் பெரும் பாதிப்பை எதிா்கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மகாஜனுக்கு வாக்களித்தனா். இதனால், காங்கிரஸ் வேட்பாளா் அபிஷேக் சிங்வி தோல்வியடைந்தாா்.

இந்நிலையில், ‘மாநில காங்கிரஸ் கமிட்டி, மாவட்ட மற்றும் வட்டாரக் குழுக்களை ஒட்டுமொத்தமாக கலைக்கும் முன்மொழிவுக்கு கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஒப்புதல் அளித்துள்ளாா்; இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது’ என்று கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஹிமாசல பிரதேச காங்கிரஸை மறுசீரமைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் புதிய மாநிலத் தலைவா் பதவிக்கு மாநில அமைச்சா்கள் அனிருத் சிங், ஹா்ஷ்வா்தன் செளஹான் உள்ளிட்டோரின் பெயா்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →