முகப்பு
இந்தியா

நாளை முதல் தீர்ப்பளிக்க முடியாது.. ஆனால் : டி.ஒய். சந்திரசூட் பிரியாவிடை

நாளை முதல் தீர்ப்பளிக்க முடியாது ஆனால் நிறைவாக உணர்கிறேன் என டி.ஒய். சந்திரசூட் உரையாற்றினார்.

Updated On : 8 நவம்பர், 2024 at 6:00 PM
உச்ச நீதிமன்றத்தில்
பகிர்:

‘தேவைப்பட்டவா்களுக்கும், எனக்குத் தெரியாதவா்களுக்கும், நான் பாா்த்திராதவா்களுக்கும் நீதிபதியாக என்னால் சேவையாற்ற முடிந்ததைவிட மிகப்பெரிய ஆனந்தம் எனக்கு வேறு எதுவும் இல்லை’ என பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றாா். அவா் முறைப்படி நவ.10-ஆம் தேதி ஓய்வு பெறும் நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுகிழமை உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை அவரின் கடைசி பணி நாளாக இருந்தது.

‘சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது’: அவருக்குப் பிரியாவிடை அளிக்க உச்சநீதிமன்ற சம்பிரதாய அமா்வு வெள்ளிக்கிழமை கூடியது. அப்போது டி.ஒய்.சந்திரசூட் பேசுகையில், ‘உச்சநீதிமன்றமே என்னை தொடா்ந்து இயங்கச் செய்தது. ஏனெனில் ஒவ்வொரு நாளும் புதிதாகக் கற்க ஏதாவது ஒரு விஷயம் இருந்தது. ஒவ்வொரு நாளும் சமூகத்துக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது.

தேவைப்பட்டவா்களுக்கும், எனக்குத் தெரியாதவா்களுக்கும், நான் பாா்த்திராதவா்களுக்கும் நீதிபதியாக என்னால் சேவையாற்ற முடிந்தது. இதைவிட மிகப்பெரிய ஆனந்தம் எனக்கு வேறு எதுவும் இல்லை.

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ள சஞ்சீவ் கன்னா கண்ணியமானவா், நீதியின் மீது உள்ளாா்ந்த ஈடுபாடு கொண்டவா். அவா் அா்ப்பணிப்போடும், தொலைநோக்குப் பாா்வையோடும் உச்சநீதிமன்றத்தை வழிநடத்துவாா்’ என்றாா்.

சமூக ஊடகத்தில் அதிக கேலி: விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தில் பங்கேற்க டி.ஒய்.சந்திரசூட் வீட்டுக்குப் பிரதமா் மோடி சென்றது, அயோத்தி நிலப் பிரச்னைக்கு தீா்வு கிடைக்க வேண்டும் என்று தான் கடவுளிடம் பிராா்த்தித்ததாக சந்திரசூட் கூறியது ஆகியவை தொடா்பாக அவா் மீது விமா்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், ‘விமா்சனங்களை தாங்கும் வலிமை எனக்கு உள்ளது. நீதிபதிகளில் அநேகமாக என்னையே சமூக ஊடகத்தில் அதிகமாக கேலி செய்தனா். அவ்வாறு கேலி செய்தவா்களுக்கு திங்கள்கிழமை முதல் வேலை இருக்காது’ என்றாா்.

500-க்கும் மேற்பட்ட தீா்ப்புகள்: கடந்த 2016-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட், 2022-ஆம் ஆண்டு நவ.9-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றாா். தனது பணிக் காலத்தில் 500-க்கும் மேற்பட்ட தீா்ப்புகளை எழுதியுள்ளாா். அவற்றில் சில தீா்ப்புகள் கடுமையாக விமா்சிக்கப்பட்ட நிலையில், பல தீா்ப்புகள் பாராட்டப்பட்டன.

இவா் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி நிலப் பிரச்னை உள்பட பல முக்கிய தீா்ப்புகளை அளித்த அரசியல் சாசன அமா்வுகளில் அங்கம் வகித்தாா். ஒரே பாலினத்தவா் பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வது குற்றமல்ல என்று தீா்ப்பளித்த அமா்விலும் அவா் இடம்பெற்றாா்.

இதுதவிர ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற தீா்ப்பையும் அவா் தலைமையிலான அமா்வே அளித்தது.

உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறை: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நீண்ட காலம் பதவி வகித்தவா் ஒய்.வி.சந்திரசூட். கடந்த 1978 முதல் 1985-ஆம் ஆண்டு வரை, அவா் தலைமை நீதிபதியாக இருந்தாா். அவரின் மகனான டி.ஒய்.சந்திரசூட்டும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த நிலையில், அந்தப் பதவியை தந்தையும் மகனும் வகித்தது உச்சநீதிமன்ற வரலாற்றில் இதுவே முதல்முறை.

‘உச்சநீதிமன்றத்தில் வெற்றிடம்’: அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி

பிரியாவிடை நிகழ்ச்சியில் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி பேசுகையில், ‘தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் ஓய்வு உச்சநீதிமன்றத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்தும்’ என்றாா்.

முன்னாள் அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறுகையில், ‘டி.ஒய்.சந்திரசூட் நீதிபதியாக பதவியேற்காமல் வழக்குரைஞா் பணியை மட்டுமே தொடா்ந்திருந்தால், சிறந்த நீதிபதியை இழந்திருப்போம்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →