தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது, ஐஆர்சிடிசி செயலி செயலிழப்பதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிகளவிலான பயணிகள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் வழித்தடங்களில்கூட முகவர்களுக்கு(டிராவல் ஏஜெண்ட்) எளிதாக தட்கல் பயணச்சீட்டுகள் கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
அவசரகால பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக, ரயில் புறப்படுவதற்கு முந்தைய நாள், தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முறை இந்திய ரயில்வேவில் உள்ளது.
இந்தப் பயணச்சீட்டை ரயில் நிலைய முன்பதிவு அலுவலகத்தில் நேரடியாகவும், ஐஆர்சிடிசி வலைதளம் அல்லது செல்போன் செயலிகள் மூலமாகவும் முன்பதிவு செய்ய முடியும்.
குளிர்சாதன வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், குளிர்சாதனம் அல்லாத படுக்கை மற்றும் உட்கார்ந்து செல்வதற்கான வகுப்புகளுக்கு காலை 11 மணி மணிக்கும் ஆன்லைனில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்குகிறது.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, ரயிலில் பயணம் செய்வதற்காக 80 சதவிகித பயணச்சீட்டுகள் ஆன்லைன் மூலமே முன்பதிவு செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ செல்போன் செயலியை, தட்கல் முன்பதிவு நேரத்தில் அதிகளவிலானோர் நாடுவதால், உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஐஆர்சிடிசி செயலியின் திறனை இந்திய ரயில்வே நிர்வாகம் மேம்படுத்தியது. ஆனால், கடந்த சில மாதங்களாக மீண்டும் தட்கலின்போது செயலிகள் செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தீபாவளி மற்றும் சத் பூஜை காலத்தில் இதுபோன்ற புகார்கள் அதிகளவில் வந்ததை ஐஆர்சிடிசி அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், அதிகளவிலானோர் குறிப்பிட்ட நேரத்தில் செயலியை பயன்படுத்துவதால் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டதாகவும், இதனை சமாளிக்க சம்பந்தப்பட்ட குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டு பெற என்ன செய்யலாம்?
தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டுகள் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க ரயில் ஆர்வலர் எஸ்.ஜெயவேல் சில வழிமுறைகளை தெரிவித்துள்ளார்.
1. ஐஆர்சிடிசியில் உள்ள முதன்மைப் பட்டியலில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.
2. பயணச்சீட்டுக்கான பணத்தை செலுத்துவதற்கு வங்கிக் கணக்குகள் அல்லது யுபிஐ செயலிகளை நாடுவதற்கு கூடுதல் நேரம் எடுக்கும் என்பதால், செயலியின் வேலட்டில் பயணத்தை முன்கூட்டியே டெபாசிட் செய்து கொள்ளலாம்.
இதன்மூலமாக, தக்கல் பயணச்சீட்டு முன்பதிவின்போது கூடுதல் நேரம் செலவாவது தவிர்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கடந்த 4 மாதங்களில் வெவ்வேறு பயணங்களுக்காக 5 முறை தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முற்பட்டதாகவும், அப்போது ஒரு முறையாவது செயலியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், மீண்டும் உள்நுழைந்து சரியான தகவல்களை அளித்தாலும் தவறு என செய்தி காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மண்ணடியை சேர்ந்த எஸ். ராம்சந்த் என்பவர் கூறுகையில், “அதிதிறன் கொண்ட இணையத்தைப் பயன்படுத்தி தட்கல் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய முயற்சித்தபோதும், காத்திருப்பு பட்டியலுக்கு சென்றது. ஆனால், முகவர்களால் மட்டும் எப்போது டிக்கெட் பெற முடிகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும், அவரது அலுவலக ஊழியர் ஒருவர் ரயில் நிலைய முன்பதிவு அலுவலகத்தில் இரண்டு மணிநேரம் காத்திருந்துதான் தட்கல் டிக்கெட்டை பெற்றதாகவும், ரயில் நிலைய அலுவலத்தில்கூட ஐஆர்சிடிசி இணையதளத்தில் பிரச்னை ஏற்படுவதாகவும் ராம்சந்த் தெரிவித்தார்.
ரயில்வே விதிமுறைப்படி, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஐஆர்சிடிசி செயலி மூலம் ஒரு மாதத்துக்கு 24 பயணச்சீட்டுகளையும், ஆதாருடன் இணைக்கப்படாத கணக்கு மூலம் 12 பயணச்சீட்டுகளையும் பயணிகளால் பெற முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.