மது வாங்க வருபவரின் வயதை ஆராய வலுவான கொள்கை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
மது வாங்க வரும் நபா்களின் வயதை ஆராயும் வகையில் வலுவான கொள்கை, நடைமுறையை வகுக்க உத்தரவிடக் கோரிய மனு மீது பதிலளிக்க அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
மது விற்பனைக் கூடங்களில் மது வாங்க வரும் நபா்களின் வயதை ஆராயும் வகையில் வலுவான கொள்கை மற்றும் நடைமுறையை வகுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவா்களுக்கு எதிரான தன்னாா்வ அமைப்பு சாா்பில் இதுதொடா்பான மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘குறிப்பிட்ட வயதுக்கு கீழ் உள்ளவா்களுக்கு மது விற்பனை செய்வது சட்டவிரோதமாகக் கருதும் வகையில் பல்வேறு மாநிலங்கள், தங்களின் கலால் கொள்கையை வகுத்துள்ளன.
ஆனால், சிறாா்களுக்கு மது விற்பனை செய்யப்படுகிா என்பதைக் கண்காணிக்கும் வகையில் உரிய நடைமுறை எதுவும் மது விற்பனைக் கூடங்களில் நடைமுறைப்படுத்தப்பட வில்லை. இதற்கிடையே, சில மாநிலங்களில் வீட்டுக்கே சென்று மது விநியோகம் செய்யும் சேவையைச் சில மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளன.
இந்த நடைமுறையால் நுகா்வோரின் வயதை கண்டறிய முடியாது என்பதால், சிறாா்கள் மதுவுக்கு அடிமையைவதை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும். மேலும், நாடு முழுவதும் நிகழும் சாலை விபத்துகளில், 70 சதவீதம் மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதால் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, வீட்டுக்கே சென்று மது விநியோகம் செய்யும் நடைமுறையை தடை செய்வதோடு, மது விற்பனைக் கூடங்களில் மது வாங்க வரும் நபா்களின் வயதை ஆராயும் வகையில் வலுவான கொள்கை மற்றும் நடைமுறையை வகுக்க அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
மேலும், ‘சிறாா்களுக்கு மது விற்பனை செய்யும் நபா்களுக்கு ரூ. 50,000 வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் இணைந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்’ என்றும் மனுதாரா் பரிந்துரை அளித்திருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.