மிகப்பெரிய ஊழல்வாதிகள்.. யாரைச் சொல்கிறார் மோடி?
உங்களின் ஒற்றுமையை உடைப்பதே காங்கிரஸின் விளையாட்டு.
நாட்டை ஆளப் பிறந்துள்ளோம் இதுதான் காங்கிரஸின் மனநிலை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தின், சந்திரபூரின் சிமூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் மோடி பேசியது,
சுதந்திரத்திற்குப் பிறகு தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் முன்னேற காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. விவசாயிகளுக்கு நெருக்கடியைச் சமாளிக்க உதவும் வகையில் பாஜக அரசு அவர்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் மாநில வளர்ச்சிக்கு உத்தரவாதமாக இருக்கும்.
காங்கிரஸ் இட ஒதுக்கீடுகளால் எரிச்சலடைகிறது. ஒரு பழங்குடி சமூகம் சாதிகளாகப் பிரிந்தால், அதன் அடையாளமும் வலிமையும் இல்லாமல் போய்விடும்.
உங்களின் ஒற்றுமையை உடைப்பதே காங்கிரஸின் விளையாட்டு. காங்கிரஸின் இந்த சதிக்கு நாம் பலியாகக்கூடாது. நாம் ஒற்றுமையாக இருக்கவிட்டால் உங்கள் இட ஒதுக்கீட்டைக் காங்கிரஸ் பறித்துவிடும் என்று அவர் பேசினார்.
மாநில வளர்ச்சிக்கு மகா விகாஸ் அகாதி கட்சியினர் தடையாக இருப்பதாகவும், மகா விகாஸ் அகாதி கூட்டணி கட்சியினர் மிகப்பெரிய ஊழல்வாதிகள் என்றும் அவர் கூறினார்.
பாஜக அரசு மகாராஷ்டிர மாநிலத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இரட்டிப்பு வளர்ச்சி அடைந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டுவர காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் விரும்புகிறது.
மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமையிலான மஹாயுதி அமோக பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைக்கும் என்பதை இங்குள்ள பெரும் கூட்டம் காட்டுகிறது,
பாஜகவின் சங்கல்ப் பத்ரா தேர்தல் அறிக்கை மகாராஷ்டிரத்தின் வளர்ச்சிக்கு உத்தரவாதமாக இருக்கும் இவ்வாறு மோடி பேசினார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நவம்பர் 20-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நவ.23ல் வாக்குகள் எண்ணப்படுகிறது.