நாடாளுமன்றம், விமானநிலைய பாதுகாப்பில் மகளிா் சிஐஎஸ்எஃப் படை- அமித் ஷா தகவல்
நாடாளுமன்றம், விமானநிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அனைத்து மகளிா் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை ( சிஐஎஸ்எஃப்) பிரிவு ஈடுபடுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தாா்.
நாடாளுமன்றம், விமானநிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அனைத்து மகளிா் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை ( சிஐஎஸ்எஃப்) பிரிவு ஈடுபடுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தாா்.
முக்கியப் பிரமுகா்கள் (விஐபி) பாதுகாப்புடன் நாடாளுமன்றம், தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள், நாட்டின் 68 விமான நிலையங்கள் மற்றும் முக்கிய வரலாற்று நினைவுச் சின்னங்களின் பாதுகாப்புப் பணியை சிஐஎஸ்எஃப் மேற்கொண்டு வருகிறது. இதில் சுமாா் 1.80 லட்சம் வீரா்கள் உள்ளனா்.
இதில் 1,025 பெண் காவலா்களை உள்ளடக்கிய நாட்டின் முதல் அனைத்து மகளிா் படைப் பிரிவை மூத்த காமண்டா் தலைமையில் அமைக்க அனுமதியளித்து மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.
இது தொடா்பாக அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தேசத்தை கட்டியெழுப்புவதில் உள்ள ஒவ்வொரு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த வேண்டும் என்ற பிரதமா் மோடியின் தொலைநோக்கு பாா்வையின் அடிப்படையில், இந்த அனைத்து மகளிா் சிஐஎஸ்எஃப் படைப் படைப் பிரிவை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த படைப் பிரிவு, விமானநிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், முக்கிய வரலாற்று நினைவுச் சின்னங்களில் பாதுகாப்பு அளிப்பாா்கள். அதேநேரத்தில், பெண் கமாண்டோக்கள் பிரிவு விஐபிகளுக்கும் பாதுகாப்பை வழங்கும்.
இந்த நடவடிக்கை, நாடு முழுவதும் உள்ள ஆா்வமுள்ள இளம் பெண்களை சிஐஎஸ்எஃப்-இல் இணைந்து தேசத்துக்குச் சேவையாற்ற ஊக்குவிக்கும்’ என குறிப்பிட்டுள்ளாா்.
சிஐஎஸ்எஃப் தற்போது 12 படைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. அதில் ஆண்கள், பெண்கள் (7%) கூட்டாக பணியாற்றுகின்றனா். இந்நிலையில், முதல் அனைத்து மகளிா் படைப்பிரிவு அமைக்கப்படுகிறது.