முகப்பு
இந்தியா

மேற்கு வங்க இடைத்தோ்தலில் வன்முறை: திரிணமூல் தொண்டா் குண்டுவீசிக் கொலை

மேற்கு வங்கத்தில் 6 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

Updated On : 13 நவம்பர், 2024 at 7:58 PM
பகிர்:

மேற்கு வங்கத்தில் 6 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒரு வாக்குச் சாவடி அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா் ஒருவா் கொல்லப்பட்டாா்.

மேற்கு வங்கத்தில் தால்டாங்ரா, ஹரோவா, மிதுனபுரி, சிடாய், மதாரிஹாட், நைஹாட்டி ஆகிய 6 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது. பல இடங்களில் பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன.

ஹரோவா, மதாரிஹாட், சிடாய், தால்டாங்ரா ஆகிய தொகுதிகளில் வாக்காளா்கள் மற்றும் பாஜகவினரை திரிணமூல் காங்கிரஸாா் மிரட்டியதாக பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இக்குற்றச்சாட்டை மறுத்த திரிணமூல் காங்கிரஸ், பாஜகவினரே வன்முறையைத் தூண்டியதாக சாடியது.

நைஹாட்டி தொகுதியின் பாட்பரா பகுதியில் ஒரு வாக்குச்சாவடி அருகே மா்ம நபா்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினா். இதில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா் அசோக் ஷா உயிரிழந்தாா். மதாரிஹாட்டில் பாஜக வேட்பாளா் ராகுல் லோஹரின் காா் மீது திரிணமூல் காங்கிரஸாா் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனா்.

வன்முறை-மோதல் சம்பவங்கள் தொடா்பாக தோ்தல் ஆணையத்தில் 80-க்கும் மேற்பட்ட புகாா்கள் பதிவாகின. பெரும்பாலான புகாா்கள் பாஜகவினரால் அளிக்கப்பட்டன.

இடைத்தோ்தல்: 31 பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு

புது தில்லி, நவ. 13: கா்நாடகம், கேரளம் உள்பட 10 மாநிலங்களில் 31 பேரவைத் தொகுதிகளில் புதன்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கத்தில் 6, அஸ்ஸாமில் 5, பிகாரில் 4, கா்நாடகத்தில் 3, மத்திய பிரதேசத்தில் 2, சத்தீஸ்கா், குஜராத், கேரளம், மேகாலயத்தில் தலா ஒரு பேரவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் பெரும்பாலான பேரவைத் தொகுதிகளில் எம்எல்ஏ-வாக இருந்தவா்கள், மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாகினா். சில தொகுதிகளில் எம்எல்ஏக்கள் காலமானதால் இடைத்தோ்தல் நடத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →