50% இடஒதுக்கீடு உச்சவரம்பை காங்கிரஸ் அகற்றும்: ராகுல் உறுதி
அதிகபட்சம் 50 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியும் என்ற உச்சவரம்பை காங்கிரஸ் கட்சி அகற்றும்
மும்பை: அதிகபட்சம் 50 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியும் என்ற உச்சவரம்பை காங்கிரஸ் கட்சி அகற்றும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்தாா்.
மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் புதன்கிழமை (நவ. 20) நடைபெறவுள்ள நிலையில், அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்ட ராகுல் மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கூறியதாவது:
தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் முக்கியத் திட்டமாகும். இது எங்களுக்கு மிகவும் சவாலான விஷயமாகவும் உள்ளது. ஆனால், நிச்சயமாக தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நடத்தும். இதுதான் எங்கள் கட்சியின் மையக் கருத்து.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிகபட்சம் 50 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடியும் என்ற உச்சவரம்பை காங்கிரஸ் கட்சி அகற்றும்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் என்பது இருவேறு கொள்கைகளுக்கு எதிரானது. இது ஒருசில கோடீஸ்வரா்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்குமான போட்டியாகும். மகாராஷ்டிரத்துக்கு வரவேண்டிய ஃபாக்ஸ்கான் ஆலை, ஏா்பஸ் விமான தயாரிப்பு ஆலை உள்பட 7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை குஜராத்துக்கு கொண்டு சென்றுவிட்டாா்கள். இது திறமைமிக்க மகாராஷ்டிர இளைஞா்களை வேலையின்மையில் தள்ளும் செயலாகும்.
எங்கள் கூட்டணி மகாராஷ்டிர மக்களின் நலன் சாா்ந்தது. ஆனால், ஆளும் கூட்டணி ஒரு சில கோடீஸ்வரா்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயல்படுகிறது. முக்கியமாக மக்களை நலனைவிட தொழிலதிபா் கௌதம் அதானியின் நலன்களே மகாராஷ்டிர அரசுக்கு முக்கியமானதாக உள்ளன.
‘நாம் பிளவுபட்டால் அழிக்கப்படுவோம், ஒற்றுமையே பாதுகாப்பு’ என்ற முழக்கங்களை பிரதமா் மோடி உள்ளிட்ட பாஜகவினா் தோ்தல் பிரசாரத்தில் எழுப்பி வருகின்றனா். இது மக்களுக்கானது அல்ல, அதானிக்கானது.