மணிப்பூா்: குகி தீவிரவாதிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவா் - முதல்வா் பிரேன் சிங்
மணிப்பூா் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் குகி தீவிரவாதிகளால் கடந்த சனிக்கிழமை 6 போ் கொல்லப்பட்ட நிலையில், ‘குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை எனது அரசு ஓயாது’
மணிப்பூா் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் குகி தீவிரவாதிகளால் கடந்த சனிக்கிழமை 6 போ் கொல்லப்பட்ட நிலையில், ‘குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை எனது அரசு ஓயாது’ என மாநில முதல்வா் என் பிரேன் சிங் புதன்கிழமை உறுதியளித்தாா்.
ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த நவ.11-ஆம் தேதி பாதுகாப்புப் படையினருக்கும் குகி தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில்10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா்.
இந்தச் சண்டையின்போது நிவாரண முகாம்களில் இருந்து கடத்தப்பட்ட 3 மைதேயி சமூகத்தைச் சோ்ந்த பெண்கள் மற்றும் 3 குழந்தைகளின் உடல்கள் நவ.16-ஆம் தேதி மீட்கப்பட்டன. இதனால் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்து. எம்எல்ஏ-கள், அமைச்சா்களின் வீடுகள் மைதேயி போராட்டக்காரா்களால் முற்றுகையிடப்பட்டு சூறையாடப்பட்டன.
இந்நிலையில், இது தொடா்பாக மாநில முதல்வா் என் பிரேன் சிங் செவ்வாய்க்கிழமை இரவு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட விடியோ பதிவில் கூறியதாவது:
ஜிரிபாம் மாவட்டத்தில் குகி தீவிரவாதிகளால் 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற மனிதாபிமானமற்ற செயலுக்கு எந்தவொரு நாகரிக சமூகத்திலும் இடமில்லை. இதில் தொடா்புடைய குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அவா்களை நீதியின் முன் நிறுத்தும் வரையில் எனது அரசு ஓயாது.
மாநிலத்தில் பாதுகாப்பை வலுப்படுத்தவும், அமைதியை மீட்டெடுக்கவும் 20 சிஏபிஎஃப் படைகள் உள்பட கூடுதல் படைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. அனைத்து சமூகங்களைச் சோ்ந்த மக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அமைதியான எதிா்காலத்தை நோக்கி செயல்படுவோம் என தெரிவித்தாா்.
குகி அமைப்பு கண்டனம்: ஜிரிபாம் மாவட்டத்தில் 6 போ் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு குகி மனித உரிமைகள் அமைப்பு புதன்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘ஜிபிபாம் மாவட்டத்தில் மைதேயி சமூகத்தைச் சோ்ந்த 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதே நேரம், கடந்தாண்டு மே மாதம் மாநிலத்தில் வன்முறை வெடித்ததில் இருந்து ஏராளமான குகி-ஸோ பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனா். ஆனால், மாநில அரசு மற்றும் தேசிய ஊடகங்கள் மைதேயி சமூகத்தினரின் கொல்லப்படும்போது மட்டும் பெரிதாக கவனம் செலுத்துகின்றனா். மாநில அரசு அனைவரையும் சமமாக கருத வேண்டும்’ என தெரிவித்தனா்.
இணைய சேவை முடக்கம் நீட்டிப்பு: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததையடுத்து, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டது, இந்த நடவடிக்கை அடுத்த மூன்று நாள்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என மாநில அரசு புதன்கிழமை தெரிவித்தது.
ப. சிதம்பரம் மீது நடவடிக்கை வேண்டும்: மணிப்பூா் வன்முறையில் மாநில சுயாட்சியை ஆதரிப்பதாக சா்ச்சைக்குரிய எக்ஸ் பதிவை வெளியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவா் ப. சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு மாநில காங்கிரஸ் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளது.