முகப்பு
இந்தியா

'வெறுப்பு அரசியலால் என் மனைவி பாதிக்கப்பட்டுள்ளார்' - சித்தராமையா

கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்கள் சந்திப்பு...

Updated On : 1 அக்டோபர், 2024 at 9:50 AM
கர்நாடக முதல்வர் சித்தராமையா.
பகிர்:

தன்னுடைய மனைவி வெறுப்பு அரசியலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மைசூரு நகர்ப்புற வளா்ச்சி ஆணைய(MUDA) நில முறைகேடு புகாரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் லோக் ஆயுக்தா காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதனிடையே சித்தராமையா தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தனக்குச் சொந்தமான நிலத்துக்கு மாற்றாக, மைசூரு நகர்ப்புற வளா்ச்சி ஆணைம் வழங்கிய 14 வீட்டுமனைகளை திருப்பி அளிப்பதாக அதன் ஆணையருக்கு சித்தராமையாவின் மனைவி பாா்வதி கடிதம் எழுதியுள்ளாா்.

நிலத்தை திருப்பியளிப்பதன் மூலமாக சித்தராமையா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக பாஜகவினர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் சித்தராமையா, 'மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் இழப்பீடாக தந்த நிலங்களை என் மனைவி பார்வதி திருப்பி தந்துள்ளார். என் மீதான வெறுப்பு அரசியலால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

முடா ஊழல் வழக்கில் தன்னையும் மற்றவர்களையும் காப்பாற்ற அவர் இந்த தனிப்பட்ட முடிவை எடுத்துள்ளார்.

நான் எந்த ஊழலும் செய்யவில்லை. என்னுடைய குழு சட்டரீதியாக இதனை எதிர்கொண்டு வருகிறது. என் மனைவி மிகுந்த வருத்தத்தில் இருந்தார். பின்னரே நிலங்களை திருப்பியளிக்க முடிவு செய்தார். அவர் சர்ச்சைகளை விரும்புவதில்லை. அவருடைய முடிவுகளை நான் மதிக்கிறேன்.

என்னுடைய மனைவியின் நிலம் அவரது சகோதரர் பரிசாக வழங்கியது. ஆனால், முடா அதனை கையகப்படுத்தி வேறு நிலம் வழங்கியது. அதற்கு மாற்றாக நாங்கள் வெவ்வேறு பகுதிகளில் வீட்டுமனைகள் கேட்டோம். அவர்கள்தான் விஜயநகரில் வழங்கினார்கள்.

என் மீது அரசியல் வெறுப்புணர்வை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் பொய் புகார் உருவாக்கி என் குடும்பத்தை சர்ச்சைக்கு இழுத்துள்ளனர்' என்றார்.

நிலமுறைகேடு விவகாரம்

முதல்வா் சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் (முடா), மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை எடுத்துக்கொண்டு நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலத்தை வழங்கியது. இதில் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில், சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்து பிறப்பித்திருந்த உத்தரவை கா்நாடக உயா்நீதிமன்றம் செப். 24-ஆம் தேதி ஏற்றுக்கொண்டது.

அமலாக்கத் துறை வழக்கு

மைசூரு நிலமுறைகேடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் மீது மைசூரு லோக் ஆயுக்தா காவல் துறையினர் செப். 27ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், அமலாக்கத் துறையும் இந்த விவகாரத்தில் சித்தராமையா மீது இன்று (செப். 30) வழக்குப்பதிவு செய்துள்ளது.

காவல் துறையின் முதல் தகவல் அறிக்கைக்கு இணையாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →