பாஜகவால் பரப்பப்படும் கொடூர நோய்.. இளைஞர்கள் பாதிப்பு: எதைச் சொல்கிறார் ராகுல்?
பாஜகவால் பரப்பப்படும் கொடூர நோயால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக ராகுல் பேச்சு
வேலையில்லாத் திண்டாட்டம் எனப்படும் கொடூரமான நோயை பாஜக பரப்பி வருவதாகவும், இதனால் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியிருக்கிறார.
ஹரியாணாவில், பாஜகவால் பரப்பப்பட்டு வரும் வேலையில்லா திண்டாட்டம் எனும் நோய், மாநிலத்தின் பாதுகாப்பையும், மாநில இளைஞர்களின் எதிர்காலத்தையும் அபாயத்துக்கு இட்டுச்செல்வதாக கூறியிருக்கும் ராகுல், மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வேலையில்லாத் திண்டாட்டத்தை முற்றிலும் ஒழித்து, ஒவ்வொரு குடும்பத்தின் வளமான வாழ்க்கைக்கு உறுதி அளிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், ராகுல் மேற்கொண்ட விஜய் சங்கல்ப் யாத்திரையின்போது, பெண்களுடன் அவர் உரையாடிய விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ராகுல், பாஜகாவால் பரப்பப்படும் வேலையில்லா திண்டாட்டம் என்ற நோயால் ஹரியாணாவின் வேர்கள், மாநில பாதுகாப்பு, இளைஞர்களின் எதிர்காலம் அபாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
விஜய் சங்கல்ப யாத்திரையின்போது, சகோதரிகள் சிலர் எனக்கு ஓய்வெடுக்க இடமளித்து, வீட்டில் செய்த ரோட்டிகளை சாப்பிடக் கொடுத்தனர். அவர்கள்தான் மாநிலத்தில் இருக்கும் பிரச்னைகளை எனக்கு விளக்கமாகக் கூறினார்கள் என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
சிறு வணிகங்களின் முதுகெலும்பை ஜிஎஸ்டி என்ற பெயரில் உடைத்துவிட்டது பாஜக, ராணுவத்துக்குத் தயாராகி வந்த இளைஞர்களின் கனவை நசுக்கிவிட்டது, விவசாயம் செய்ய நினைத்திருந்த இளைஞர்களின் எண்ணத்தை, வேளாண் சட்டங்களை கொண்டுவந்து இல்லாமல் செய்துவிட்டது என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார்.