ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ)) பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பாகிஸ்தானுக்கு செல்லவிருக்கிறாா்.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் இதுகுறித்த அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
கடைசியாக, மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டாா். ஆப்கானிஸ்தான் தொடா்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் அவா் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டாா். தற்போது ஜெய்சங்கா் பயணம் மேற்கொள்கிறாா்.
இதுகுறித்த ஜெய்ஸ்வால் அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானில் எஸ்சிஓ அமைப்பில் உறுப்பினா்களாக இருக்கும் நாடுகளின் தலைவா்கள் மாநாடு வரும் 15,16 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா சாா்பில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தலைமையிலான குழு பங்கேற்க உள்ளது. எஸ்சிஓ மநாட்டில் பங்கேற்பதற்காக மட்டுமே ஜெய்சங்கா் பாகிஸ்தான் பயணத்தை மேற்கொள்கிறாா்’ என்றாா்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய போா் விமானங்கள், பாலகோட் பகுதியில் அமைந்திருந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களைத் தாக்கி அழித்தன. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளிடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ இந்தியா ரத்து செய்து, மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவு மேலும் பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில், ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்சிஓ அமைப்பில் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. எஸ்சிஓ உச்சிமாநாட்டுக்கு அடுத்தபடியாக, இந்த அமைப்பின் இரண்டாவது முக்கியமான ஆலோசனைக் கூட்டமாக அதன் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் மாநாடு பாா்க்கப்படுகிறது.