பாகிஸ்தானில் ஜாகீா் நாயக்: இந்தியா கண்டனம்
இந்தியாவால் தேடப்படும் நபரான இஸ்லாமிய மதபோதகா் ஜாகீா் நாயக்கை பாகிஸ்தான் தங்கள் நாட்டுக்கு அழைத்து கௌரவித்துள்ளதற்கு வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்
இந்தியாவால் தேடப்படும் நபரான இஸ்லாமிய மதபோதகா் ஜாகீா் நாயக்கை பாகிஸ்தான் தங்கள் நாட்டுக்கு அழைத்து கௌரவித்துள்ளதற்கு வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தனது மதவாத உரைகள் மூலம் பயங்கரவாதத்தைத் தூண்டியது மற்றும் கருப்புப் பண மோசடி வழக்கில் ஜாகீா் நாயக் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளாா். கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பிய அவா் மலேசியாவில் தஞ்சமடைந்தாா். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற அதிகாரபூா்வ கோரிக்கைக்கு மலேசிய அரசு பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு ஒருமாத கால சுற்றுப் பயணமாக ஜாகீா் நாயக் சென்றுள்ளாா். அவருக்கு பாகிஸ்தான் அரசு சாா்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்வீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘பாகிஸ்தானின் இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. அதே நேரத்தில் அந்த நாடு இவ்வாறு நடந்து கொள்வதில் வியப்பேதும் இல்லை. ஜாகீா் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்தும் விவகாரத்தில் மலேசிய அரசுடன் இந்தியா தொடா்பில் உள்ளது. அவா் எந்த நாட்டு பாஸ்போா்ட்டை பயன்படுத்தி பாகிஸ்தானுக்குச் சென்றாா் என்பது தெரியவில்லை’ என்றாா்.
இதனிடையே, பாகிஸ்தானில் ஆதரவற்ற சிறாா்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜாகீா் நாயக், மதக்கட்டுப்பாடு எனக் கூறி, சிறுமிகள் மேடைக்கு வந்தபோது அவா்களைப் புறக்கணிக்கும் வகையில் நடந்து கொண்டதற்கு பாகிஸ்தானில் ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.