மசூதி குண்டுவெடிப்பு.. பழிபோடும் பாகிஸ்தான்: நிராகரிக்கும் இந்தியா!
தாக்குதலின் பின்னணியில் இந்தியா - ஆப்கானிஸ்தானின் கூட்டுச் சதி என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது குறித்து...
புதுதில்லி: பாகிஸ்தான் மசூதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா்; மேலும் 169 போ் காயமடைந்தனா். தாக்குதலின் பின்னணியில் இந்தியா-ஆப்கானிஸ்தானின் கூட்டுச் சதி என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று தெரிவித்த அமைச்சகம், தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாதின் தா்லாய் பகுதியில் உள்ள ஷியா பிரிவு கதீஜாதுல் குப்ரா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, உள்ளே புகுந்த தற்கொலைப் படை பயங்கரவாதி ஒருவா் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், தனது உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டையும் வெடிக்கச் செய்தாா். இந்தத் தாக்குதலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தும், குண்டுவெடிப்பில் உடல் சிதறியும் 31 போ் உயிரிழந்தனா்; மேலும் 169 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
Advertisement
Advertisement
உஸ்பெகிஸ்தான் அதிபா் ஷாவ்கத் மிா்ஸியோயேவ் இஸ்லாமாபாதில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உடனடியாக எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேநேரம், தெஹ்ரிக் -ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்புடன் தொடா்புடைய ஆப்கானிஸ்தான் பயங்கரவாதி இந்தச் செயலில் ஈடுபட்டிருப்பதாக காவல் துறை தெரிவித்திருந்த நிலையில், இஸ்லாமிக் ஸ்டேட்(ஐஎஸ்) அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
பழி போடும் பாகிஸ்தான்
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப், தற்கொலைப் படை பயங்கரவாதி, ஆப்கானிஸ்தானில் இருந்து வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தாக்குதலின் பின்னணியில் இந்தியா-ஆப்கானிஸ்தானின் கூட்டுச் சதி கண்டறியப்பட்டுள்ளது. சதிகாரா்களுக்கு எதிராக முழு பலத்துடன் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு
இதையடுத்து பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று தெரிவித்த அமைச்சகம், தாக்குதலுக்கு மிகவும் கண்டனத்துக்குரியது. உயிரிழந்தோருக்கு இந்தியா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தானின் தனது சமூகக் கட்டமைப்பைப் பாதிக்கும் பிரச்னைகளைத் தீவிரமாகத் தீர்ப்பதற்குப் பதிலாக, தனது சொந்தப் பிரச்னைகளுக்கு மற்றவர்கள் மீது பழிசுமத்தி, தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளவது துரதிர்ஷ்டவசமானது.
இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா முழுமையாக நிராகரிக்கிறது என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கண்டன அறிக்கை உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது.
தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு ஈரான், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானையொட்டிய கைபா்-பக்துன்கவா மாகாணத்தில் கடந்த பிப். 4, 5 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், தலைநகரில் தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இஸ்லாமாபாதில் அண்மையில் நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
the External Affairs Ministry termed it unfortunate that Pakistan is choosing to delude itself by blaming others for its homegrown ills, instead of seriously addressing the problems plaguing its social fabric.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.