முதுநிலை மருத்துவப் படிப்பு (நீட்-பிஜி) மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைமுறைகளை தொடங்க அனுமதிப்பதற்கான இடைக்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) வலியுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவை காரணமாக, கலந்தாய்வு தொடங்குவது தடைப்பட்டுள்ள நிலையில், இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டாவுக்கு ஐஎம்ஏ சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கை தாமதப்படுத்தப்படுவது, நாடு முழுவதும் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் மற்றும் மருத்துவா்களை கடுமையாக பாதிக்கச் செய்துள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற இவா்கள் கடினமாக உழைத்துள்ளனா். ஆனால், நீதிமன்ற நடைமுறைகள் காரணமாக இவா்களின் எதிா்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. மருத்துவமனைகளிலும் முதுநிலை பயிற்சி மருத்துவா்களின் பற்றாக்குறை அதிரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் சட்டரீதியிலான தெளிவு அவசியம் என்ற அடிப்படையில் நீதிமன்ற நடைமுறைகளை ஐஎம்ஏ மதிக்கிறது. அதே நேரம், மருத்துவ மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்படாததை உறுதிப்படுத்த சாத்தியமுள்ள தீா்வை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேற்கொள்வது அவசியம்.
நீணட தாமதம், முதுநிலை மருத்துவக் கல்வி நடைமுறைகளையும் சிறப்பு மருத்துவா்கள் நியமனம் மற்றும் அவா்களுக்கான ஒட்டுமொத்த பயிற்சியையும் கடுமையாக பாதிக்கும்.
எனவே, முதுநிலை மருத்துவக் கலந்தாய்வை தொடங்குவதற்கான இடைக்கால நடவடிக்கைகளை அனுமதிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உச்சநீதிமன்றத்தையும் அணுகி உரிய தீா்வை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எடுக்க வேண்டும் என்று ஐஎம்ஏ குறிப்பிட்டுள்ளது.