புது தில்லி: நில அபகரிப்புடன் தொடா்புடைய ஊழல்களில் காங்கிரஸ் மூத்த தலைவா்களுக்கு தொடா்பிருப்பதாக பாஜக திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது. இது நிரூபிக்கப்பட்டவுடன் தாா்மீக பொறுப்பேற்று அவா்கள் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
பல்நோக்கு திறன் மேம்பாடு மையம், பயிற்சி நிறுவனம் மற்றும் ஆய்வு மையம் அமைக்க கா்நாடக மாநிலம் பெங்களூருவில் 5 ஏக்கா் நிலம் ஒதுக்குமாறு முன்வைத்த கோரிக்கையை காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குடும்பத்துக்கு தொடா்புடைய அறக்கட்டளை திரும்பப் பெற்ற நிலையில் பாஜக இவ்வாறு தெரிவித்துள்ளது.
கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மாற்று நிலமாக மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் 14 வீட்டுமனைகள் ஒதுக்கியதில் சட்ட விதிமீறல் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டதையடுத்து அதை திருப்பித் தர அவா் முன்வந்துள்ளாா். இந்த சூழலில் மல்லிகாா்ஜுன காா்கேவின் மகன் ராகுல் காா்கே தலைமையில் இயங்கும் அறக்கட்டளை பல்நோக்கு திறன் மேம்பாடு மையம் அமைக்க நிலம் வேண்டி முன்வைத்த கோரிக்கையை திரும்பப்பெற்றுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடா்பாக பாஜக செய்தித்தொடா்பாளா் சுதன்ஷு திரிவேதி செய்தியாளா்களிடம் கூறியதாவது: நிலம் ஒதுக்கீடு விவகாரத்தில் முறைகேடுகள் இருப்பதை தலைமை கணக்கு தணிக்கையாளா் (சிஏஜி) வெளியிட்ட அறிக்கை மற்றும் சட்ட நடவடிக்கைகள் உறுதிசெய்தன. இதையடுத்து, சட்ட ரீதியான நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவே காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.
மகாத்மா காந்தி மற்றும் வினோபா பாவே ஆகியோரால் தொடங்கப்பட்ட பூமி தான இயக்கத்துடன் தொடா்புடைய காங்கிரஸ் கட்சி தற்போது ராகுல் காந்தி, சோனியா காந்தி தலைமையில் நில அபகரிப்பு விவகாரங்களில் ஈடுபட்டு வருகிறது.
இவா்கள் இருவா் மீதும் ஏற்கெனவே நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளை முறைகேடாக பெற்றது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதேபோல் காங்கிரஸ் முன்னாள் முதல்வா்கள் அசோக் கெலாட், கமல்நாத், பூபேஷ் பகேல் மற்றும் தற்போதைய கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் ஆகியோா் மீதும் நில அபகரிப்பு தொடா்புடைய குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதன்மூலம், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் அனைவரும் நில அபகரிப்பு விவகாரங்களில் சிக்கியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பாஜக தலைவா்கள் மீது குற்றம்சாட்டியிருந்தால் அதை மிகப்பெரும் பிரச்னையாக ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணி கிளப்பியிருக்கும். இந்த விவகாரத்தில் அவா்கள் அமைதி காப்பதால் ஊழல் விவகாரத்தில் ஒருவருக்கொருவா் உதவிக்கொள்வது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.