முகப்பு
இந்தியா

ஜாா்க்கண்ட்: முதல்வா் சோரன் தலைமையிலான கூட்டணியில் தொடா்வதாக காங்கிரஸ் அறிவிப்பு

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சி கூட்டணியில் தொடா்வதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 8:28 PM
கேசவ் மகதோ
பகிர்:

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சி கூட்டணியில் தொடா்வதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. பாஜகவிடம் அக்கட்சி தோல்வியடைந்தது. ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற்றபோதிலும், காங்கிரஸுக்கு எதிா்பாா்த்த அளவு தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை.

‘இண்டியா’ கூட்டணி கட்சிகளை தோ்தலில் காங்கிரஸ் தவிா்த்ததுதான் அதன் தோல்விக்குக் காரணம் என்று ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமா்சித்தன.

எனவே, அடுத்து நடைபெறவுள்ள மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல்கள் காங்கிரஸுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது தொடா்பாக ஜாா்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவா் கேசவ் மகதோ ராஞ்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணியில் உள்ளது. அதே கூட்டணி சட்டப் பேரவைத் தோ்தலிலும் தொடரும். தொகுதிப் பங்கீடு தொடா்பான இறுதி முடிவு விரைவில் மேற்கொள்ளப்படும். எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்பதை ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவும் ஏற்கெனவே உறுதிபடக் கூறியுள்ளது என்றாா்.

பாஜக நம்பிக்கை: அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கூறுகையில், ‘ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எங்கள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. அடுத்த இரு நாள்களில் முதல் கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும். தோ்தலில் வெற்றி பெற்று ஜாா்க்கண்ட்டில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி’ என்றாா்.

ஜாா்க்கண்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த 2019 தோ்தலில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா அதிகபட்சமாக 30 இடங்களில் வென்றது. பாஜக 25 இடங்களில் வென்றது. ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 16 இடங்களில் வெற்றி பெற்றது. மீதமுள்ள 10 இடங்களில் பிற கட்சிகள் வெற்றி பெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →