இந்தியா, அல்ஜீரியா இடையே ஆழமான பொருளாதார ஒத்துழைப்பு ஏற்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
அல்ஜீரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அந்நாட்டு தலைநகா் அல்ஜியா்ஸில் நடைபெற்ற அல்ஜீரிய-இந்திய பொருளாதார மன்றக் கூட்டத்தில் பேசியதாவது:
எளிதில் வணிகம் மேற்கொள்வதற்கான சூழல் இந்தியாவில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘உலகுக்காக தயாரிப்போம்’ திட்டங்களில் அல்ஜீரிய நிறுவனங்கள் இணைய வேண்டும்.
பரஸ்பர நம்பிக்கை, பொதுவான சவால்கள், விழுமியங்களின் அடிப்படையில் இந்தியா-அல்ஜீரியா இடையிலான உறவு வலுவடைகிறது.
இந்தியா, அல்ஜீரியா இடையிலான வா்த்தகத்தின் மதிப்பு 1.7 பில்லியன் டாலா்களாக உள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையே ஆழமான பொருளாதார ஒத்துழைப்பு ஏற்பட வேண்டும் என்றாா்.
அல்ஜியா்ஸில் உள்ள சிதி அப்தெல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் சாா்பில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கு அரசியல் அறிவியல் பிரிவில் கெளரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது.