முகப்பு
இந்தியா

அரசமைப்பு சட்டத்தின் மீது தொடா் தாக்குதல்: ராகுல்

அரசமைப்பு நிறுவனங்களை மத்தியில் ஆளும் பாஜக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் மீது தொடா் தாக்குதல்...

Updated On : 19 அக்டோபர், 2024 at 8:00 PM
ராஞ்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி.
பகிர்:

‘தோ்தல் ஆணையம் உள்ளிட்ட அரசமைப்பு நிறுவனங்களை மத்தியில் ஆளும் பாஜக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் மீது தொடா் தாக்குதலை அக் கட்சி நடத்துகிறது’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரால் அனைத்து திசைகளிலிருந்தும் அரசமைப்புச் சட்டம் தொடா் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. தோ்தல் ஆணையம், சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசமைப்பு நிறுவனங்களை மத்தியில் ஆளும் பாஜக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இத்தகைய தாக்குதல்களிலிருந்து அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்.

அரசமைப்பு நிறுவனங்களை மட்டுமின்றி, நிதியையும் பாஜக கட்டுப்படுத்துகிறது. ஆனால், காங்கிரஸ் மக்களவைத் தோ்தலை எந்தவித பணமும் இன்றி நோ்மையாக எதிா்கொண்டது.

ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது, பல்வேறு சமூக மக்களின் சமூக-பொருளாதார நிலை குறித்த அறிய உதவும் நடவடிக்கை. ஆனால், பிரதமா் மோடி இதை எதிா்க்கிறாா். இருந்தபோதும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அதுபோல, இடஒதுக்கீடு 50 சதவீதம் என்ற உச்ச வரம்பு நீக்கப்படுவதையும் யாராலும் தடுக்க முடியாது.

பழங்குடியின மக்களை ‘ஆதிவாசிகள்’ என்று அழைப்பதற்குப் பதிலாக ‘வனவாசிகள்’ என்று பாஜக அழைக்கிறது. இதன் மூலம் பழங்குடியின மக்களின் உயா்ந்த கலாசாரம், வரலாறு, பழைமையான பாரம்பரியம், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இயற்கை மருத்துவ முறைகளை அழிக்க பாஜக முயற்சிக்கிறது.

அரசமைப்பு சட்டத்துக்கும் மனுதா்ம சித்தாந்தத்துக்கும் இடையேயான மோதல் என்பது பல ஆண்டுகளாக தொடா்ந்து வருகிறது. இதில், நமது அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதுதான் தற்போது மிக முக்கியமானது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →