மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் கோப்புப் படம்
இந்தியா

மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7660 தற்காலிக வீடுகள்!

ஒப்புதல் அளித்த பிரதமருக்கும் மத்திய உள்துறை அமைச்சருக்கும் மணிப்பூர் முதல்வர் நன்றி தெரிவித்தார்.

DIN

மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக வீடுகள் கட்டத் தரப்படும் என்று முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார்.

மணிப்பூரில் நிலவி வரும் இன வன்முறை வெடித்ததில் இருந்து, பொதுமக்கள் பள்ளிகள், கல்லூரிகளில்தான் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் உள்ள பல்வேறு நிவாரண முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு இடமளிக்க சுமார் 7,660 தற்காலிக வீடுகளைக் கட்ட, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் என். பிரேன் சிங் தெரிவித்தார்.

7,660 வீடுகளில் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் காங்போக்பி மாவட்டத்தில் 1813 வீடுகளும், சுராசந்த்பூர் மாவட்டத்தில் 1331 வீடுகளும், காக்ச்சிங்கில் 1217 வீடுகளும், பிஷ்ணுபூரில் 1015 வீடுகளும், இம்பால் கிழக்கில் 594 வீடுகளும், டெங்னௌபாலில் 880 வீடுகளும், சந்தேலில் 511 வீடுகளும், இம்பால் மேற்கில் 225 வீடுகளும், கம்ஜோங்கில் 74 வீடுகளும் கட்டப்படும்.

முதல்வர் பிரேன் சிங் செய்தியாளர்களுடன் பேசியதாவது, ``பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்திலிருந்து பெறப்பட்ட நிதி போதுமானதாக இல்லாததால், ஃபுபாலா (மொய்ராங்) பட்டுப்புழு பண்ணை, சுராசந்த்பூர், காங்போக்பி ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2500 வீடுகளைக் கட்டுவதற்கு, தலா 4 லட்சம் ரூபாய் கூடுதலாகக் கோரப்பட்டுள்ளது.

வீடுகளைக் கட்டுவதற்கான நிதியை அனுமதித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் தொடர்பான திட்டங்கள் தொடர்பான சர்ச்சையை சரியான நேரத்தில் தலையிட்டு தீர்த்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கும் எனது நன்றி.

மேலும், தேசிய நெடுஞ்சாலை-37 இல் உள்ள சர்ச்சைக்குரிய நில இழப்பீட்டை தீர்ப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதன்மூலம், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து ஒப்பந்ததாரர்கள் பணிகளை மீண்டும் தொடங்கலாம்.

மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் இரண்டிலும் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ. 1000 கோடி கூடுதல் நிதி விரைவில் மத்திய அரசால் அனுமதிக்கப்படும். மலைப்பாங்கான மாவட்டங்களின் மாவட்ட தலைமையகங்களில் இருந்து 8 முதல் 10 கி.மீ. சுற்றளவில் கான்கிரீட் சாலைகள் ரூ. 175 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

மாநில அரசால் முன்மொழியப்பட்ட 117 திட்டங்களில், மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதியின்கீழ் (ரூ. 217 கோடி) 57 திட்டங்களுக்கு மட்டுமே மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் நம்பிக்கை உள்ளது.

ரீமெல் புயலால் ஏற்பட்ட இழப்புக்கு சுமார் ரூ. 170 கோடி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்தது. மாநிலத்தில் சுமார் ரூ. 220 கோடி திட்ட செலவில் உலகத் தரம் வாய்ந்த கால்பந்து மைதானத்தை கட்டுவதற்கான மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராட்டப்பட வேண்டியவர்; கட்டுமானத்திற்கு பொருத்தமான பகுதி அடையாளம் காணப்படும்.

தீபாவளி மற்றும் நிங்கோல் சக்கௌபா பண்டிகைக்கு முன்னர் நிவாரண முகாம்களில் வசிக்கும் அனைத்து தனிநபர்களுக்கும் ஐந்தாவது கட்டமாக தலா ரூ. 1000 வழங்கப்படும். மாநிலத்தில் அமைதி மற்றும் இயல்புநிலையைக் கொண்டுவருவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படுவது பாராட்டத்தக்கது’’ என்று தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்தாண்டு மே மாதத்திலிருந்து, ஓராண்டுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், குகி பழங்குடியினா் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனா். இதுவே, மோதலுக்கு முக்கியக் காரணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

SCROLL FOR NEXT