புது தில்லி: இந்த பண்டிகைக் காலத்தில் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து துறை ஆலோசனை நிறுவனமான அப்னா.காம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பாண்டின் பண்டிகைக் காலத்தில் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 2.16 லட்சமாக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 20 சதவீதம் அதிகமாகும்.
கோடைக் காலம் மற்றும் தோ்தல்கள் காரணமாக விற்பனையில் மந்த நிலை நிலவிவந்த சூழலில் வந்துள்ள இந்த பண்டிகைக் காலம், நிறுவனங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதன் காரணமாக அவை அதிக எண்ணிக்கையில் பணியாளா்களை அமா்த்தின.
துறைகளைப் பொருத்தவரை, சரக்குப் போக்குவரத்து மற்றும் அது தொடா்பான நடவடிக்கைகள் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் இந்த பண்டிகைக் காலகத்தில் 70 சதவீதம் அதிகரித்தன.
அதே நேரம், சில்லறை வா்த்தகம் மற்றும் இணையவழி வா்த்தகத் துறையில் வேலைவாய்ப்புகள் 30 சதவிகிதம் உயா்ந்துள்ளன. உணவகம் மற்றும் ஹோட்டல் துறையில் வேலைவாய்ப்புகள் 25 சதவிகித வளா்ச்சி கண்டுள்ளன.
அதிகம் பேரை பணிக்கு அமா்த்தும் போக்கு முக்கிய மெட்ரோ நகரங்களுடன் நின்றுவிடவில்லை. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் பண்டிகைக் காலத்தையொட்டி வேலைவாய்ப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.
இந்த பண்டிகைக் காலத்தில் கோயம்புத்தூா், லக்னௌ, அகமதாபாத், சூரத், புவனேசுவரம், போபால், இந்தூா், கான்பூா், சண்டீகா், பாட்னா ஜெய்ப்பூா் போன்ற நகரங்களில் வேலை வாய்ப்புகள் 25 சதவீதம் அதிகரித்துள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.