ம.பி. தேசிய பூங்காவில் இரு நாள்களில் 7 யானைகள் உயிரிழப்பு- விசாரணைக்கு உத்தரவு
மத்திய பிரதேசத்தின் பந்தாவ்கா் தேசிய பூங்காவில் கடந்த இரு நாள்களில் 7 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 3 யானைகள் கடுமையான உடல் நல பாதிப்பால் உயிருக்குப் போராடி வருகின்றன.
மத்திய பிரதேசத்தின் பந்தாவ்கா் தேசிய பூங்காவில் கடந்த இரு நாள்களில் 7 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 3 யானைகள் கடுமையான உடல் நல பாதிப்பால் உயிருக்குப் போராடி வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் உமாரியா மாவட்டத்தில் பந்தாவ்கா் தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான யானைகளும் வசித்து வருகின்றன. அங்கு செவ்வாய்க்கிழமை வனத்துறையினா் ரோந்து மேற்கொண்டபோது 4 யானைகள் உயிரிழந்து கிடந்தன. மேலும், சில யானைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு சோா்வடைந்து நடக்க முடியாத நிலையில் இருந்தன.
இதையடுத்து, வனத்துறையினா் மற்றும் விலங்குகள் நல மருத்துவா்கள் விரைந்து சென்று சிகிச்சை அளித்தனா். இறந்த யானைகளின் உடல்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன.
புதன்கிழமை மேலும் 3 யானைகள் உயிரிழந்தன. வனத்துறையினா் அடா் வனப் பகுதியில் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டபோது மேலும் 7 யானைகள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பது தெரியவந்தது. இதில் 3 யானைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவற்றுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட யானைகள் அனைத்தும் ஒரே குழுவாக வனத்தைச் சுற்றி வந்தன.
வனப்பகுதியில் விளைந்த ஒரு வகை வரகு அரிசியை இந்த யானைக் கூட்டம் சாப்பிட்டதால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், யானைகளின் உடல்கூறாய்வு முடிவுகள் கிடைத்த பிறகுதான் சரியான காரணத்தைக் கூற முடியும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
யானைகள் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக உரிய விசாரணை மேற்கொள்ள மாநில வனத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.