இந்தியா

சிவாஜி சிலை விவகாரம்... மோடி மன்னிப்பு கேட்டது எதற்காக?

சிவாஜி சிலை இடிந்த விவகாரத்தில் மோடி மன்னிப்புக்கோரியது அவரின் ஆணவத்தைக் காட்டுகிறது

DIN

சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக்கோரியது அவரின் ஆணவத்தைக் காட்டுவதாக சிவசேனைக் கட்சித் (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே இன்று (செப். 1) விமர்சித்தார்.

மேலும், சிவாஜி சிலை இடிந்து விழுந்தது, பாஜக அரசின் ஊழல்களுக்கான எடுத்துக்காட்டு என்றும் சிவாஜியை பின்பற்றுபவர்களுக்கு ஏற்பட்ட அவமானம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் நிறுவப்பட்டிருந்த சத்ரபதி சிவாஜியின் சிலை கடந்த திங்கள்கிழமை பிற்பகல் (ஆக. 26) இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் மகாராஷ்டிரத்தில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சிலை இடிந்து விழுந்ததற்கு பாஜக அரசின் ஊழலே காரணம் என இந்தியா கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. எனினும், பலத்த காற்றும் தொடர் மழையுமே சிலை இடிந்ததற்கான காரணமாக பாஜக குறிப்பிடுகிறது.

இதனிடையே சிவாஜி சிலை விழுந்து நொறுங்கியதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் மன்னிப்புக் கோரியிருந்தார்.

''சத்ரபதி சிவாஜி வெறும் அரசர் மட்டும் அல்ல. அவர் எங்களுக்குத் தெய்வம். இன்று என் தலையை தெய்வத்தின் பாதங்கள் முன்பு தாழ்த்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சிலை விழுந்ததால் மனமுடைந்துள்ள மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

எதிர்க்கட்சிகள் பேரணி

இந்நிலையில், சத்ரபதி சிவாஜி சிலை இடிந்த விவகாரத்தில் ஆளும் கட்சியின் (பாஜக) ஊழலைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பேரணியில் ஈடுபட்டனர். மகா விகாஸ் அகாதி கூட்டணிக் கட்சியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் தலைமையில் பேரணி நடைபெற்றது.

பேரணியின்போது சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் மன்னிப்பை கவனித்தீர்களா? அதில் ஆணவம் தெரியும். பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டது எதற்காக? 9 மாதங்களுக்கு முன்பு அவர் திறந்து வைத்த சிலை விழுந்ததற்காகவா? அதில் ஊழல் நடந்ததற்காகவா? சத்ரபதி சிவாஜியை அவமதித்த சக்திகளை வீழ்த்த மகா விகாஸ் அகாதி கூட்டணி தொண்டர்கள் ஒன்றிணைவார்கள். சிவாஜி சிலை இடிந்து விழுந்தது, மகாராஷ்டிரத்தின் ஆன்மாவுக்கு ஏற்பட்ட அவமானம்.

சிவாஜி சிலை இடிந்ததற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்கிறோம். ஆனால், சிலை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாகக் கூறுகிறது பாஜக. அதைப்பற்றி கவலையில்லை. மாநிலத்தின் பெருமைக்காக நாங்கள் போராடுகிறோம். ஊழல் நிறைந்த அரசு வெளியேற வேண்டும் என இந்தியா நுழைவு வாயில் வரை பேரணியாக வந்துள்ளோம்.

சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்தது, பாஜக அரசின் ஊழல்களுக்கான எடுத்துக்காட்டு. சிவாஜியை பின்பற்றுபவர்களுக்கு ஏற்பட்ட அவமானம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்முவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா

மதன மோக ரூப சுந்தரி... ஜான்வி கபூர்!

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் மேலும் இருவர் பலி!

தோளோடு தோள் நிற்கும் இந்தியா - ரஷியா! புதினுடனான சந்திப்பில் மோடி பேச்சு!

வட மாநிலங்களில் அடுத்த 24 - 48 மணி நேரம் எப்படி இருக்கும்?

SCROLL FOR NEXT