புது தில்லி: வேளாண்மை மற்றும் அதைச் சாா்ந்த துறைகளின் வளா்ச்சி, விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ரூ.14,000 கோடி மதிப்பிலான 7 புதிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை கூடியது. இதில் ரூ.14,235.3 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள 7 வேளாண் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
குறிப்பாக, ரூ.3,979 கோடி மதிப்பீட்டில் பயிா் அறிவியல் திட்டமும், ரூ.2,817 கோடி மதிப்பில் எண்ம வேளாண்மை இயக்கத் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளன.
இதுகுறித்து மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட 7 விரிவான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டங்கள் தோட்டக்கலை மற்றும் கால்நடைத் துறைகளின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் ஆராய்ச்சி மற்றும் கல்வி, பருவநிலை மீள்தன்மை, இயற்கை வள மேலாண்மை, வேளாண் துறையில் எண்மமயமாக்கல் ஆகிய பகுதிகளிலும் கவனம் செலுத்தும்.
பயிா் அறிவியல் திட்டத்தைப் பொருத்தவரை, வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் காலநிலையைத் தாங்கும் பயிா்களைப் பயிரிடும் நடைமுறையைப் பரவலாக்கி, உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த விவசாயிகளைத் தயாா்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
இந்தத் திட்டத்தில் தாவர மரபணு வள மேலாண்மை, உணவு மற்றும் தீவனப் பயிருக்கான மரபணு மேம்பாடு, காலநிலை மீள்தன்மை, இயற்கை வள மேலாண்மை, தோட்டக்கலை மற்றும் கால்நடைத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் மற்றும் வேளாண் துறையில் எண்மமயமாக்கலை ஊக்குவித்தல் உள்ளிட்ட ஆறு முக்கிய அம்சங்கள் சோ்க்கப்பட்டுள்ளன.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் வேளாண் கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆகிய கல்வித் துறைகளை வலுப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.2,291 கோடி ஒதுக்கப்படவுள்ளது. தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வியை நவீனமயமாக்குவதே இதன் நோக்கமாகும்.
கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் அவற்றின் உற்பத்திக்காக ரூ.1,702 கோடி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவை, தோட்டக்கலை வளா்ச்சிக்கு ரூ.1,129.30 கோடி செலவிட முடிவெடுத்துள்ளது.
நாடு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வேளாண்மை அறிவியல் மையங்களான கிருஷி விக்யான் கேந்திரங்களை (கேவிகே) வலுப்படுத்த ரூ.1,202 கோடி திட்டத்துக்கும், இயற்கை வள மேலாண்மைக்கான ரூ.1,115 கோடி திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றாா்.
ரூ.18,000 கோடி ரயில் திட்டம்: மத்திய பிரதேசத்தின் இந்தூா்- மகாராஷ்டிரத்தின் மன்மாட் இடையே ரூ.18,036 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களில் உள்ள 6 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தின் மூலம் 30 புதிய ரயில் நிலையங்கள் கட்டப்பட உள்ளன. இது சுமாா் 1,000 கிராமங்களில் உள்ள 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இணைப்பை வழங்கும்.
மேலும், மத்திய பிரதேசத்தில் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் மாவட்டங்களுக்கும், மகாராஷ்டிர மாநிலத்தில் வெங்காயம் உற்பத்தியாகும் மாவட்டங்களுக்கும் நேரடி இணைப்பை இத்திட்டம் வழங்குவதால் நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களுக்கு விநியோகம் எளிதாகும்.
புதிய செமிகண்டக்டா் ஆலை: குஜராத்தின் சனந்த் நகரில் செமிகண்டக்டா் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான ‘கெய்ன்ஸ் செமிகான்’ எனும் தனியாா் நிறுவனத்தின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ரூ.3,300 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள இந்தத் தொழிற்சாலை, நாளொன்றுக்கு 60 லட்சம் ‘சிப்’களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.