நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் கல்வி மற்றும் சமூக, பொருளாதார செயல்பாடுகள் அவசியமானது என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (செப். 3) தெரிவித்தார்.
மேலும், பெண்களின் மீதான நமது பார்வை மாற வேண்டும் என்றும், அவர்களின் வளர்ச்சியின்றி நாட்டின் வளர்ச்சி சாத்தியாமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிர மாநிலத்துக்கு மூன்று நாள்கள் பயணமாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சென்றுள்ளார்.
புணேவிலுள்ள சிம்பியோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (செப். 3) கலந்துகொண்டார்.
அதில், பேசிய அவர், புதிய கல்விக் கொள்கை குறித்தும், மாணவர்களால் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள் குறித்தும் பேசினார். மாணவர்கள் மேற்கொண்டுவரும் ஆராய்ச்சிகள் நாட்டிற்கு மட்டுமல்லாமல், உலகின் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மும்பையில் மகாராஷ்டிர சட்ட மேலவையின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்துகொண்டார்.
அப்போது பெண்களின் முக்கியத்துவம் குறித்து அவர் பேசியதாவது,
பெண்களின் மீதான நமது பார்வை மாற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் கல்வி மற்றும் சமூக, பொருளாதார செயல்பாடுகள் அவசியமானது. நாட்டின் மக்கள்தொகையில் பாதி எண்ணிக்கையில் பெண்கள் உள்ளனர். அவர்களின் வளர்ச்சி இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை.
கற்பழிப்பு, கொலை என பெண்களுக்கு எதிராக நாள்தோறும் பல்வேறு கொடுமைகள் நடக்கின்றன. இந்த சூழல் மாற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும் பேசிய முர்மு, பெண்கள் மேம்பாட்டிற்காக உழைத்த வீரமாதா ஜிஜாபாய், மராத்தா அரசர் சத்ரபதி சிவாஜி, சமூக புரட்சியாளர் சாவித்ரிபாய் பூலே ஆகியோரையும் குறிப்பிட்டுப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.