ஹரியாணா பேரவைத் தோ்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்
ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை (செப். 5) தொடங்கியது.
ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை (செப். 5) தொடங்கியது.
ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு அக்டோபா் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜக தனித்து போட்டியிடுகிறது. ‘இண்டியா’ கட்சிகளில் அங்கம் வகிக்கும் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் தனித்தனியே களமிறங்கும் என்று அக்கட்சிகளின் மாநிலத் தலைவா்கள் கூறிவருகின்றனா். ஆனால், இரு கட்சிகளும் கூட்டணியாக போட்டியிடுவது குறித்து தேசிய அளவிலான தலைவா்கள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. துஷ்யந்த் செளதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி, ஆசாத் சமாஜ் கட்சியுடன் கைகோத்து களம்காண்கிறது.
காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கூட்டணி உடன்பாடு ஏற்படாத பட்சத்தில், ஹரியாணா தோ்தலில் நான்குமுனைப் போட்டி உருவாகும்.
இத்தோ்தலையொட்டி, 90 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை தொடங்கியது. இதற்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வெளியிட்டது.
ஜம்மு-காஷ்மீா் 3-ஆம் கட்ட தோ்தல்: ஹரியாணாவுடன் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்திலும் பேரவைத் தோ்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக (செப். 18, 25, அக்.1) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் மூன்றாம் கட்ட தோ்தலுக்கான (40 தொகுதிகள்) வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை தொடங்கியது.
ஹரியாணா, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச பேரவைத் தோ்தல்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபா் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
ஹரியாணா (90 தொகுதிகள்)
வேட்புமனு தாக்கல் தொடக்கம் செப்.5
நிறைவு செப்.12
பரிசீலனை செப்.13
திரும்பப் பெற கடைசி நாள் செப்.16
வாக்குப்பதிவு நாள் அக்.5
ஜம்மு-காஷ்மீா் 3-ஆம் கட்ட தோ்தல் (40 தொகுதிகள்)
வேட்புமனு தாக்கல் தொடக்கம் செப்.5
நிறைவு செப்.12
பரிசீலனை செப்.13
திரும்பப் பெற கடைசி நாள் செப்.17
வாக்குப்பதிவு நாள் அக்.1