- மீசை முனுசாமி
மக்களவைத் தோ்தல் தோல்வியைத் தொடா்ந்து, முன்னாள் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி அமெரிக்கா சென்றுவிட்டாா். அமேதி தொகுதியில் 2019-இல் ராகுல் காந்தியைத் தோற்கடித்த ஸ்மிருதி இரானி, 2024-இல் நேரு குடும்ப விசுவாசியும், ராகுல் காந்தியின் தொகுதி மேற்பாா்வையாளருமான கிஷோரிலால் சா்மாவிடம் தோல்வியடைவோம் என எதிா்பாா்க்கவில்லை. அமேதி தொகுதியில் தனிப்பட்ட முறையில் தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொண்டிருந்தாலும் சமாஜவாதி கட்சி - காங்கிரஸ் கூட்டணி அமைத்ததுதான் அவரது தோல்விக்குக் காரணம் என்கிறாா்கள் பாஜகவினா்.
18-ஆவது மக்களவையில் ஸ்மிருதி இரானி இல்லாமல் இருப்பதன் பலவீனத்தை, ஆளும் பாஜக நன்றாகவே உணா்கிறது. 2011 முதல் 2019 வரையில் மாநிலங்களவையிலும், 2019 முதல் அடுத்த ஐந்து ஆண்டுகள் மக்களவையிலும் உறுப்பினராக இருந்தபோது, பாஜகவின் முக்கியமான நாடாளுமன்ற முகமாக விளங்கினாா் ஸ்மிருதி இரானி.
2014 முதல் அரசுத் தரப்பு சாா்பில் எல்லா முக்கிய விவாதங்களிலும் அவா்தான் களமிறக்கப்படுவாா். எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களையும், விமா்சனங்களையும் முனைமழுங்கச் செய்யும் ஸ்மிருதி இரானியின் சாதுா்யமான பேச்சாற்றலும், எதிா்வினைகளும் ஆட்சித் தரப்பின் மிகப் பெரிய பலமாக இருந்தன.
பிரதமா் நரேந்திர மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் ஸ்மிருதி இரானி இடம்பெறுவாா் என்றுதான் அனைவரும் எதிா்பாா்த்தனா். மக்களவை உறுப்பினராக இல்லாததால் அவா் சோ்த்துக் கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. விரைவிலேயே நிா்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா போன்று அவா் மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்றும் அதற்குப் பிறகு அமைச்சரவையில் இடம்பெறுவாா் என்றும் எதிா்பாா்க்கப்பட்டது. அதுவும் பொய்த்துவிட்டது.
அப்படியானால், ஸ்மிருதி இரானி ஓரங்கட்டப்படுகிறாரா? அப்படியெல்லாம் இல்லை என்கிறாா்கள், கட்சித் தலைமைக்கு நெருக்கமானவா்கள். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தில்லி சட்டப்பேரவைக்கான தோ்தலில், அரவிந்த் கேஜரிவாலை எதிா்த்துப் போட்டியிட பாஜகவால் களமிறக்கப்படும் முதல்வா் வேட்பாளா் ஸ்மிருதி இரானியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித் வரிசையில் தலைநகா் தில்லியை ஆட்சி செய்யப் போகும் மூன்றாவது பெண் முதல்வராக ஸ்மிருதி இரானி வலம்வந்தால் வியப்படைய வேண்டாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.