முகப்பு
இந்தியா

பிரதமா் மோடி கூட்டத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு: 4 பேரின் தூக்கு தண்டனை 30 ஆண்டுகள் சிறையாக குறைப்பு

கடந்த 2013-ஆம் ஆண்டு பாட்னாவில் அப்போதைய பிரதமா் வேட்பாளா் நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டம் உள்பட பல இடங்களில் வெடிகுண்டுகள் வைத்த வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக பாட்னா உயா்நீதிமன்றம் குறைத்தது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 8:13 PM
கோப்புப்படம்.
பகிர்:

கடந்த 2013-ஆம் ஆண்டு பாட்னாவில் அப்போதைய பிரதமா் வேட்பாளா் நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டம் உள்பட பல இடங்களில் வெடிகுண்டுகள் வைத்த வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக பாட்னா உயா்நீதிமன்றம் குறைத்தது.

கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபரில் மக்களவைத் தோ்தல் பிரசாரம் உச்சத்தில் இருந்தது. அப்போதைய குஜராத் முதல்வரும், பாஜக பிரதமா் வேட்பாளருமான மோடி பாட்னா நகரின் காந்தி மைதானத்தில் அக்டோபா் 27-ஆம் தேதி தோ்தல் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்றாா்.

அன்று பாட்னாவில் ரயில் நிலையம், திரையரங்கம் உள்பட 10 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 5 போ் உயிரிழந்தனா். 66 போ் காயமடைந்தனா்.

மோடி பேசிய காந்தி மைதானத்தில் 5 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் மோடி பேசிய மேடையின் கீழ் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடிக்காததால் அவா் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினாா்.

இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியது தெரியவந்தது. என்ஐஏ விசாரணை மேற்கொண்டு இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 9 பேரை கைது செய்தனா். இவா்கள் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு இம்தியாஸ் அன்சாரி, ஹைதா் அலி, நோமன் அன்சாரி, முகமது முஜிபுல்லா அன்சாரி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த 2021-ஆம் ஆண்டு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

உமா் சித்திக், அசாருதீன் குரேஷி ஆகிய பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனையும், அகமது உசைன், பெரோஸ் அஸ்லாம் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறையும், முகமது இப்திகாா் ஆலம் என்ற பயங்கரவாதிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தண்டனையைக் குறைக்கக் கோரி அந்த பயங்கரவாதிகள் பாட்னா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இதனை விசாரித்த நீதிபதிகள், மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பயங்கரவாதிகளின் தண்டனையை 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகக் குறைத்தனா். அதே நேரத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவருக்கு தண்டனையை குறைக்க முடியாது என்று அறிவித்துவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →