தமிழ்நாட்டில் விசாரணை நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட பெரும்பாலான தூக்கு தண்டனைகள் மேல்முறையீட்டில் ரத்து செய்யப்படுவதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
அதாவது, தமிழ்நாட்டில் விசாரணை நீதிமன்றம் அளிக்கும் தண்டனைக்கும் மேல்முறையீடு செய்து விசாரணைக்கும் இடையே ஒரு ஆழமான இடைவெளி இருப்பதை இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டில் விசாரணை நீதிமன்றங்களால் வழங்கப்படும் பெரும்பாலான தூக்கு தண்டனைகள் பின்னர் உயர் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படுகின்றன அல்லது குறைக்கப்படுகின்றன. கடந்த 2025-ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் அத்தகைய தண்டனைகளில் பெரும்பாலானவற்றைக் குறைத்தது அல்லது ரத்து செய்திருப்பது தேசிய அறிக்கையின்படி தெரிய வந்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள என்ஏஎல்எஸ்ஏஆர் சட்டப் பல்கலைக்கழகத்தின் தி ஸ்கொயர் சர்க்கிள் கிளினிக், பிப். 2026-இல் வெளியிடப்பட்ட "இந்தியாவில் மரண தண்டனை: ஆண்டு புள்ளிவிவர அறிக்கை 2025"- கடந்த 2025-ஆம் ஆண்டில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட வழக்குகளை ஆராய்ந்து, விசாரணை நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் அடிப்படையில் கடந்த பத்தாண்டுகளில் அந்த வழக்குகளின் போக்குகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த ஆய்வறிக்கையில், தமிழகத்தில் விசாரணை நீதிமன்றங்கள் அளிக்கும் தண்டனைக்கும் மேல்முறையீட்டு காலத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று பிறப்பிக்கப்படும் தீர்ப்புக்கும் இடையே ஒரு ஆழமான இடைவெளி இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதாவது, கடந்த 2025 ஆம் ஆண்டில், சென்னை உயர்நீதிமன்றம், பல்வேறு தூக்கு தண்டனை வழக்குகளை விசாரணை செய்த போதும், ஒரே ஒரு தீர்ப்பை மட்டுமே உறுதி செய்திருக்கிறது. அதே வேளையில் ஐந்து வழக்குகளில் எட்டு பேரின் தூக்கு தண்டனைகளைக் குறைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமேல், விசாரணை நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட பல தூக்கு தண்டனைகள் உறுதி செய்யப்படவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு உயர் நீதிமன்றம் உறுதி செய்த ஒரே ஒரு தூக்கு தண்டனை, திருநெல்வேலியில் 2022ஆம் ஆண்டு ஆர் வைகுண்டம் என்பவரின் கொலை வழக்குடன் தொடர்புடையதாக உள்ளது. அதாவது, 2016ஆம் ஆண்டு ஒரு கொலை முயற்சி வழக்கில் தங்களுக்கு எதிராக சாட்சியமளித்த வைகுண்டம் என்பவரை ஆர். செல்வராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் பழிவாங்கும் விதமாக கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேல்முறையீடுகளின்போது, விசாரணை மற்றும் விசாரணை நிலைகளில் இருந்த குறைபாடுகளைக் கண்டறிந்துதான் உயர் நீதிமன்றங்கள் தீர்ப்பில் தலையிடுகின்றன, இதில் பலவீனமான சாட்சிகள், ஆதாரங்களும் அடங்கும்.
அதாவது, விசாரணை நீதிமன்றங்கள் கடுமையான சமூக மற்றும் பொது அழுத்தத்தின் கீழ் செயல்படுகின்றன என்று மக்கள் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் (PUCL) தேசிய பொதுச் செயலாளரும் வழக்குறைஞருமான வி. சுரேஷ் கூறுகிறார்.
எப்போதும் நீதிமன்றங்கள், தண்டனைக்கான தனி விசாரணையை நடத்தி, தனிப்பட்ட சூழ்நிலை, மன ஆரோக்கியம், திருந்தும் வாய்ப்புகளுக்கான சாத்தியக் கூறுகளை மதிப்பிட்டபிறகே மரண தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் அல்லது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல முறை வலியுறுத்தி வந்துள்ளது.
வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு, மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட நிகழ்வுகளையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தேசிய அளவில், விசாரணை நீதிமன்றங்கள் 2025 ஆம் ஆண்டில் 94 வழக்குகளில் 128 பேருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளன. அதில் 10 பெண்களும் அடங்குவர். அதில் ஐந்து வழக்குகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளது. பெரும்பாலான தூக்கு தண்டனைகள் பின்னர் மேல்முறையீட்டில் மாற்றப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.