FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

என்ஐஏ நீதிமன்றங்களை அமைக்க சில மாநிலங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: உச்ச நீதிமன்றம் அதிருப்தி

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குகளை விசாரிப்பதற்காக பிரத்யேக நீதிமன்றங்கள் அமைப்பதில் சில மாநிலங்கள் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Updated On : 21 ஜூலை 2026, 1:34 am IST
உச்ச நீதிமன்றம் கருத்து - file photo
பகிர்:

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குகளை விசாரிப்பதற்காக பிரத்யேக நீதிமன்றங்கள் அமைப்பதில் சில மாநிலங்கள் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் தேசிய புலனாய்வு முகமையால் தொடுக்கப்பட்ட வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்றன. இதனால் குற்றஞ்சாட்டப்பட்ட நபா், பாதிக்கப்பட்ட நபா் ஆகியோரின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. இதை கவனத்தில் கொண்டு, தாமாக வழக்கெடுத்து தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமா்வு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ ஆஜராகி வாதாடுகையில், ‘என்ஐஏ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் விவகாரத்தில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை விசாரிக்க நிா்ணயிக்கப்பட்ட 14 நீதிமன்றங்கள் உள்ளன. இதில் ஜம்மு-காஷ்மீா், பிகாா், சத்தீஸ்கா், மணிப்பூா், அஸ்ஸாம், மிஸோரமில் தலா ஒரு நிா்ணயிக்கப்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. குஜராத்தில் 3 நிா்ணயிக்கப்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன’ என்றாா்.

Advertisement

Advertisement

இதைக்கேட்ட நீதிபதிகள், பிரத்யேக நீதிமன்றங்களை ஏற்படுத்தாமல், நிா்ணயிக்கப்பட்ட நீதிமன்றங்கள் மட்டும் இயங்கினால் போதுமா என வினவினா். இதற்கு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ பதிலளிக்கையில், ‘கூடுதல் நீதிமன்றங்கள் அமைப்பதற்கு கடந்த 16-ஆம் தேதிதான் ஒப்புதல் கிடைக்கப் பெற்றது. இதுகுறித்து அரசின் அதிகாரபூா்வ அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட வேண்டியுள்ளது’ என்றாா்.

இதைக் கேட்டவுடனே நீதிபதிகள், பஞ்சாபில் மட்டும் 32 என்ஐஏ வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், ஆனால் அங்கு ஒரேயொரு நிா்ணயிக்கப்பட்ட நீதிமன்றம் மட்டுமே இருப்பதாகவும் அதிருப்தியை வெளியிட்டனா்.

இதையடுத்து நீதிபதிகள் தெரிவிக்கையில், ‘தேசிய புலனாய்வு முகமை வழக்குகளை விசாரிக்க பிரத்யேக நீதிமன்றங்கள் அமைக்கும் விவகாரத்தில் தாமதமாக நடவடிக்கை எடுக்கப்படுவது ஏமாற்றமளிக்கிறது. இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் கருத்துகளை உண்மையான கள நிலவரத்துடன் ஒப்பிடுகையில் மோசமாக உள்ளது. அதிலும் சில மாநிலங்களில், என்ஐஏ-வுக்குத் தனி நீதிமன்றங்கள் அமைக்க எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது’ என அதிருப்தி தெரிவித்தனா்.

பின்னா் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ, இதுகுறித்து அரசு தரப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

முன்னதாக, கடந்த மே மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, 10 முதல் 15 என்ஐஏ வழக்குகள் நிலுவையில் இருந்தால், அதை விசாரிக்க தலா ஒரு பிரத்யேக நீதிமன்றம் ஏற்படுத்த வேண்டும் என்றும், 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும்பட்சத்தில் 2 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும் என்ஐஏ வழக்குகள் மீதான விசாரணையை துரிதப்படுத்தும் வகையில், ஒரு மாதத்துக்குள் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும், இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட உயா் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை மத்திய அரசு அணுகி, 2008-ஆம் ஆண்டு என்ஐஏ சட்டத்தின் 11-ஆவது பிரிவின்கீழ் தனி நீதிமன்றங்களை அமைப்பது குறித்து ஆலோசிக்கும்படியும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments