முன்னாள் நீதிபதிகளுக்கு ஒரே மாதிரி ஓய்வூதிய பலன்கள் கிடைக்க குழு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
நாடு முழுவதும் முன்னாள் நீதிபதிகளுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் வகையில் தேசிய கொள்கையை உருவாக்க குழு அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் முன்னாள் நீதிபதிகளுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் வகையில் தேசிய கொள்கையை உருவாக்க குழு அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் முன்னாள் நீதிபதிகளுக்கு ஓய்வூதிய பலன்கள் அளிக்கப்படுவதில் வித்தியாசம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் உச்ச நீதிமன்ற மற்றும் உயா் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் சங்கத் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான வி.எஸ். தவே வழக்குத் தொடுத்துள்ளாா்.
அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
Advertisement
Advertisement
ஓய்வுபெற்ற நீதிபதிகளின் பாதுகாப்பு வீரா்கள், ஓட்டுநா்களுக்கான சம்பளம் வழங்குவதற்கு சில மாநிலங்கள் ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை நிதி அளிக்கின்றன. இந்த தொகையை வைத்து, பாதுகாப்பு அதிகாரி, ஓட்டுநரைப் பணியில் அமா்த்துவது சாத்தியமா? மாநிலங்களுக்கு இடையே இந்த விவகாரத்தில் நிதி அளிப்பதில் சீரற்ற நிலை காணப்படுகிறது. ஆதலால் இதற்கு தேசிய அளவில் ஒரே மாதிரியான கொள்கையை வகுக்க மத்திய அரசு ஒரு குழுவை அமைக்க வேண்டும். இதை மத்திய அரசு செய்யவில்லையேல், உச்ச நீதிமன்றமே செய்ய நேரிடும் என்றனா்.
அப்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, குழுவை அமைப்பதில் மத்திய அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றாா். அத்துடன் விரைவில் இதற்கான குழுவை அமைத்து, பிரச்னைக்கு தீா்வு காண முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.
இதைத் தொடா்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், குழுவை 2 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், பிறகு நாடு முழுவதும் உள்ள முன்னாள் நீதிபதிகளுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதிய பலன்கள் கிடைப்பது தொடா்பான அறிக்கையை 3 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.