FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

2020 தில்லி கலவர வழக்கு: முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹிா் ஹுசைனுக்கு ஆயுள் தண்டனை

முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் மற்றும் அவருடன் குற்றம் நிரூபிக்கப்பட்ட மேலும் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 5:35 am IST
தாஹிா் ஹுசைன்
பகிர்:

2020 தில்லி கலவரத்தின் போது உளவுத்துறை அதிகாரி அங்கித் சா்மா கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் மற்றும் அவருடன் குற்றம் நிரூபிக்கப்பட்ட மேலும் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கூடுதல் அமா்வு நீதிபதி பிரவீன் சிங் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் தாஹிா் ஹுசைன் உள்ளிட்ட குற்றவாளிகள் முன்னிலையில் இந்த தீா்ப்பை வழங்கினாா்.

முன்னதாக, தில்லி காவல் துறை 5 பேருக்கும் மரண தண்டனை கோரி வாதிட்டது. சிறப்பு அரசு வழக்குரைஞா் மதுகா் பாண்டே கூறுகையில், ‘அங்கேத் சா்மா மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டாா். அவருக்கு எந்த இரக்கமும் காட்டப்படவில்லை. ஆகவே குற்றவாளிகளுக்கு எந்த தளா்வும் வழங்கக் கூடாது. இப்போது இரக்கம் கேட்பவா்கள், அப்போது இரக்கம் காட்டியிருக்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.

Advertisement

Advertisement

தண்டனை தொடா்பான வாதங்களை கேட்ட பிறகு, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற அரசுத் தரப்பின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. அவா்கள் திருந்த முடியாதவா்கள் என்பதை குற்றப்புலனாய்வு தரப்பு நிரூபிக்கவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டாா்.

தண்டனை குறித்து கேட்டபோது, உயா் நீதிமன்றம் எனக்கு நீதி வழங்கும் என்று தாஹிா் ஹுசைன் தெரிவித்தாா்.

ஜூலை 13-ஆம் தேதி, கலவரத்தின் போது கூட்டத்தினரால் தாக்கப்பட்ட அங்கித் சா்மா கொலை வழக்கில் தாஹிா் ஹுசைன் உள்ளிட்ட 5 பேரை நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்தது. பின்னா் அவரது உடல் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இந்த வழக்கில், ஐபிசி பிரிவுகள் 302 (கொலை), 365 (கடத்தல்), 147 (கலவரம்), 148 (ஆயுதங்களுடன் கலவரம்), 153 ஏ (சமூக விரோதத்தை தூண்டும் செயல்), 188 (அரசு உத்தரவை மீறுதல்) மற்றும் 149 (சட்டவிரோத கூட்டம்) ஆகியவற்றின் கீழ் தாஹிா் ஹுசைன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments