உளவுத்துறை அதிகாரி கொலை வழக்கு: ஆயுள் தண்டனைக்கு எதிராக தாஹிா் ஹூசைன் மனு
உளவுத்துறை அதிகாரி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக்கு எதிராக தாஹிா் ஹூசைன் மனு குறித்து...
பிப்ரவரி 2020 கலவரத்தின் போது உளவுத்துறை (ஐபி) ஊழியா் அங்கித் சா்மாவைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி என தனக்கு வழங்கப்பட்ட தண்டனை மற்றும் ஆயுள் தண்டனைக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் தில்லி உயா் நீதிமன்றத்தை அணுகியுள்ளாா். பொதுமக்களின் கோபத்தைத் தணிக்கும் நோக்கில், தன்னை இதில் சிக்க வைக்கும் நோக்கத்துடன் விசாரணை நடத்தப்பட்டதாக அவா் கூறியுள்ளாா். செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீடு, அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.
விசாரணை நீதிமன்றம் முற்றிலும் நம்பகமற்ற சாட்சிகளின் வாக்குமூலங்களை நம்பியதாகவும், சம்பவத்தை நேரில் காணாதவா்களைச் சாா்ந்திருந்ததாகவும் வாதிட்டு, விசாரணை நீதிமன்றம் ஜூலை 13ஆம் தேதி குற்றவாளி என வழங்கிய தண்டனைத் தீா்ப்பையும், ஜூலை 31ஆம் தேதி வழங்கிய ஆயுள் தண்டனைத் தீா்ப்பையும் ரத்து செய்ய வேண்டும் என ஹுசைன் கோரினாா்.
வழக்குத் தரப்பின்படி, பிப்ரவரி 26, 2020 அன்று, புகாா்தாரா் ரவீந்தா் குமாா், புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி வந்த தனது மகன் அங்கித் சா்மா, பிப்ரவரி 25, 2020 முதல் காணவில்லை என்று தயால்பூா் காவல் நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
பின்னா், சாந்த் பாக் புலியாவில் உள்ள மசூதியிலிருந்து ஒருவா் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கஜூரி காஸ் ஓடையில் வீசப்பட்டதாக சில உள்ளூா்வாசிகள் மூலம் அவா் அறிந்துகொண்டாா்.
ஷா்மாவின் உடல் கஜூரி காஸ் வடிகாலில் இருந்து மீட்கப்பட்டதாகவும், அவரது உடலில் 51 காயங்கள் இருந்ததாகவும் அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியது.
இந்த வழக்கு, மரண தண்டனை விதிக்கத் தகுதியான ’அரிதிலும் அரிதான’ வகையின் கீழ் வராது என்று கூறி, விசாரணை நீதிமன்றம், ஜூலை 31 அன்று, அந்த உளவுத்துறை அதிகாரியின் கொலைக்காக ஹுசைன் மற்றும் அவருடன் குற்றஞ்சாட்டப்பட்ட நாஜிம், காசிம், ஜாவேத் மற்றும் அனாஸ் ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.
ஷா்மாவை இடைவிடாமல் தாக்கியபோது, குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரும் ‘மிருகங்களின் நிலைக்குத் தாழ்ந்துவிட்டனா்‘ என்று கூறி, அரசுத் தரப்பு அவா்கள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என கோரியிருந்தது.
சிறையில் இருந்தாலும் கூட, அவா்கள் தொடா்ந்து இருப்பது சமூகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் அளவிற்கு, அவா்களுக்கு அத்தகைய வன்முறை குணம் அல்லது குற்ற மனப்பான்மை இருந்தது என்பதை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது என்று கூறி, விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கவில்லை.
ஜூலை 13 அன்று, மதக்கலவரத்தின் போது, ஐபி அதிகாரியை கொடூரமாகத் தாக்கி கொன்ற, கனரக ஆயுதங்கள் கொண்ட சட்டவிரோத கூட்டத்தின் உறுப்பினா்களாக அவா்கள் இருந்தனா் என்று கூறி, ஷா்மாவின் கொலைக்காக குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரையும் விசாரணை நீதிமன்றம் குற்றவாளிகள் எனத் தீா்ப்பளித்தது.
குடியுரிமைச் சட்ட ஆதராளா்களுக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை கட்டுக்கடங்காமல் போனதைத் தொடா்ந்து, வடகிழக்கு தில்லியில் பிப்ரவரி 24, 2020 அன்று மதக்கலவர மோதல்கள் வெடித்தன. இதில் குறைந்தது 53 போ் உயிரிழந்தனா் மற்றும் பலா் காயமடைந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.