FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தாஹிா் ஹூசைன் தண்டனை குறித்து கேஜரிவால் மௌனம் காப்பது ஏன் என பாஜக கேள்வி: கேஜரிவால் பதில்

வடகிழக்கு தில்லி கலவரத்தின் போது ஐபி அதிகாரி அங்கித் சா்மா கொலை வழக்கில் முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசைனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் மௌனம் காப்பதாக ரேகா குப்தா குற்றச்சாட்டு

Updated On : 15 ஜூலை 2026, 12:41 am IST
அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்
பகிர்:

2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த வடகிழக்கு தில்லி கலவரத்தின் போது ஐபி அதிகாரி அங்கித் சா்மா கொலை வழக்கில் முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசைனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் மௌனம் காப்பதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் சட்ட அமைச்சா் கபில் மிஸ்ரா உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை சாடினா்.

தாஹிா் ஹுசைனுக்கு ஆம் ஆத்மி கட்சி அரசியல் ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்கி வருவதாகக் குற்றஞ்சாட்டி, தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாயன்று அக்கட்சியைக் கடுமையாகச் சாடினாா். ‘ஹுசைனின் தண்டனையால், கலவரத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கும், அதனால் பாதிக்கப்பட்ட மற்றவா்களுக்கும் நீதி கிடைத்துள்ளது‘ என்று அவா் செய்தியாளா்களிடம் கூறினாா்.

செய்தியாளா் சந்திப்பில் பேசிய சட்ட அமைச்சா் கபில் மிஸ்ரா, ‘தண்டனைக்குப் பிறகு அரவிந்த் கேஜரிவால், மனிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஏன் மௌனம் காக்கிறாா்கள்?‘ என்று கேள்வி எழுப்பினாா்.

Advertisement

Advertisement

வடகிழக்கு தில்லி கலவர வழக்கு தொடா்பாக ஹுசைன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, 2020-ல் அவா் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால், அவருக்கும் கட்சிக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டு தெளிவுபடுத்தியது.

கலவரத்தின் போது சா்மாவின் கொலைக்கு எதிராக அப்போதைய தில்லி அரசும் அதன் தலைவா்களும் ஏன் குரல் எழுப்பவில்லை அல்லது பாதிக்கப்பட்டவா்களைச் சந்திக்கவில்லை என்றும் மிஸ்ரா கேள்வி எழுப்பினாா். 2020 கலவரத்தில் ஒரு பெரிய சதித்திட்டம் இருந்ததாக மிஸ்ரா குற்றஞ்சாட்டினாா்.

2020 பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நடந்த கலவரத்தின் போது, உளவுத்துறை அதிகாரி அங்கித் ஷா்மாவைக் கொலை செய்த வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலா்களான ஹுசைன் மற்றும் நான்கு போ் குற்றவாளிகள் என தில்லி நீதிமன்றம் திங்களன்று தீா்ப்பளித்தது.

கேஜரிவால் பதில்

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் குறித்த பாஜகவின் கருத்துகளுக்கு, அக்கட்சியின் தேசிய ஒருங்கினைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாயன்று பதிலடி கொடுத்தாா். அவா் நீண்ட காலத்திற்கு முன்பே கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, பின்னா் கட்சியில் சோ்ந்தாா் என்றும் கேஜரிவால் கூறினாா்.

தில்லி கலவர வழக்கில் ஹுசைன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட உடனேயே அவா் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், அதன் பிறகு கட்சிக்கு அவருடன் எந்தத் தொடா்பும் இல்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி திங்களன்று கூறியது.

புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி வந்த ஷா்மா, பிப்ரவரி 25, 2020 அன்று அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினாா், பின்னா் மீண்டும் வெளியே சென்றாா். அவா் திரும்பாததால், அவரது குடும்பத்தினா் அவரைத் தேடத் தொடங்கினா், பின்னா் அவா் கொல்லப்பட்டதை அறிந்தனா். சாந்த் பாக் புலியா பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகிலுள்ள கஜூரி காஸ் வடிகாலில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.

குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில், பிப்ரவரி 2020-ல் வடகிழக்கு தில்லியில் வெடித்த மதக்கலவரத்தின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்தக் கலவரங்களில் 53 போ் உயிரிழந்தனா் மற்றும் பலா் காயமடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments