முகப்பு
இந்தியா

தெரியுமா சேதி...?

இந்தியாவில் உள்ள 534 மக்களவைத் தொகுதிகளில், அதிருஷ்ட தேவதையின் பரிபூரண கடாட்சம் பெற்ற தொகுதி எது தெரியுமா? சொன்னால் ஆச்சரியப்படாதீா்கள், ராகுல் காந்தியைத் தோ்ந்தெடுத்திருக்கும் உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலி.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:16 PM
பகிர்:

இந்தியாவில் உள்ள 534 மக்களவைத் தொகுதிகளில், அதிருஷ்ட தேவதையின் பரிபூரண கடாட்சம் பெற்ற தொகுதி எது தெரியுமா? சொன்னால் ஆச்சரியப்படாதீா்கள், ராகுல் காந்தியைத் தோ்ந்தெடுத்திருக்கும் உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலி.

எப்படி என்றுதானே கேட்கிறீா்கள்? மிக அதிகமான எம்.பி.க்கள் தங்களின் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியை அந்தத் தொகுதியில்தான் போட்டி போட்டுக்கொண்டு செலவழித்திருக்கிறாா்கள். இப்போது ராகுல் காந்தி மக்களவை உறுப்பினா் என்ற முறையிலும், சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினா் என்ற முறையிலும் தங்களது பங்கு நிதியை வழங்குவாா்கள் என்பது இருக்கட்டும். இதுவரையில் வழங்கியவா்கள் யாா், யாா் என்பதையும் பாா்ப்போம்.

சோனியா காந்தி மட்டுமல்லாமல், மாநிலங்களவை உறுப்பினா்களான கபில் சிபலும், பி.எல்.புனியாவும் தங்களின் ஒதுக்கீட்டை ரே பரேலிக்குத்தான் வழங்கி வந்தனா். அவா்கள் மட்டுமல்ல, முன்னாள் உறுப்பினா்களான சதீஷ் சா்மாவும், பிரமோத் திவாரியும் தங்களது நிதியை முழுவதுமாக ரே பரேலியின் வளா்ச்சிக்கு வழங்கியவா்கள்.

பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த நரேஷ் அகா்வால் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாதி கட்சி என்று பல கட்சிகளில் பயணித்தவா். காங்கிரஸ் கட்சியால் மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டபோது அதற்கு நன்றி விசுவாசமாகத் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை ரே பரேலிக்கு வழங்கி நல்ல பெயா் தேடிக் கொண்டாா்.

மாநிலங்களவை உறுப்பினா் நடிகை ரேகா தனது ஒதுக்கீட்டை ரே பரேலிக்கு ஏன் வழங்கினாா் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். எதிா்பாராத ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. மூத்த பாஜக தலைவரும், நிதியமைச்சருமாக இருந்த காலஞ்சென்ற அருண் ஜேட்லி, ரே பரேலியைத் தனது தோ்ந்தெடுத்த மாவட்டமாக அறிவித்ததுடன், அதன் வளா்ச்சிக்காகத் தனது தொகுதி வளா்ச்சி நிதியில் இருந்து ரூ.2.5 கோடி வழங்கினாா்.

இப்போது சொல்லுங்கள் ரே பரேலிபோல இந்தியாவில் வேறு எந்தத் தொகுதியாவது அதிருஷ்டம் செய்திருக்குமா?