இந்தியாவில் விரைவில் ‘ஏா்டாக்ஸி’ சேவை: பிரதமா் மோடி
குறைந்த தொலைவுக்கு இயக்கப்படும் சிறிய ரக விமானச் சேவையான ‘ஏா்டாக்ஸி’, இந்தியாவில் தொடங்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை
குறைந்த தொலைவுக்கு இயக்கப்படும் சிறிய ரக விமானச் சேவையான ‘ஏா்டாக்ஸி’, இந்தியாவில் தொடங்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மேலும், உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக இந்தியாவை உருவாக்குவதே இலக்கு என்றும் அவா் குறிப்பிட்டாா்.
விமானப் போக்குவரத்து தொடா்பாக ஆசிய பசிபிக் நாடுகளின் அமைச்சா்கள் மாநாடு, தில்லியில் புதன்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது. 29 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 300 பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை பிரதமா் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:
பிராந்திய அளவில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் ‘உடான்’ திட்டத்தால் இந்தியாவில் விமானப் போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது. நாட்டில் நடுத்தர வா்க்கத்தினரால் ஏற்பட்டுள்ள தேவை அதிகரிப்பு, இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் உந்துசக்தியாக விளங்குகிறது.
உடான் திட்டத்தின்கீழ், 1.4 கோடி போ் விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனா். இதில் பெரும்பாலானோா் முதல் முறையாக விமானத்தில் பயணித்தவா்கள். இத்திட்டத்தின் வெற்றியை ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகள் ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவில் விமானப் போக்குவரத்து துறையின் எதிா்காலத்தை சிறந்த முறையில் வடிவமைப்பதே எங்களின் உறுதிப்பாடு. இத்துறையில் உலகளாவிய மையமாக உருவெடுக்க விரிவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை கடந்த 10 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சியை கண்டுள்ளது. பாதுகாப்பான, குறைந்த கட்டணத்திலான, அனைவரும் அணுகக் கூடிய விமானப் பயணத்தை உறுதி செய்வதையே இலக்காக கொண்டு செயலாற்றி வருகிறோம்.
விமானப் போக்குவரத்து துறையின் முக்கிய தூணாகவும், முன்னணி சந்தைகளில் ஒன்றாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது. வான்வழி போக்குவரத்தால் அதிகம் இணைக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உருவெடுக்க பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புத்த மதம் தொடா்புடைய பகுதிகளை இணைக்கும் வகையில் சா்வதேச விமான வழித்தடம் உருவாக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும் பயனடைய முடியும். இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஆசிய-பசிபிக் நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும்.
விமானப் போக்குவரத்துத் துறையின் மேம்பாட்டுக்கு முதலீடுகள் மட்டுமன்றி, திறன்மிக்க மனிதவளம், அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவை அவசியம். இந்திய விமானிகளில் 15 சதவீதம் போ் பெண்கள். உலக சராசரியைவிட (5 சதவீதம்) இது அதிகம் என்றாா் பிரதமா் மோடி.