மகாராஷ்டிரத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியாகினர்.
ரசாயான ஆலை விபத்து
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும், இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
மும்பையில் இருந்து 110 கிமீ தொலைவில் உள்ள ரோஹா நகரில் உள்ள தாதவ் எம்ஐடிசியில் உள்ள சாதனா நைட்ரோ கெம் நிறுவனத்தில் காலை 11.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி
இதுகுறித்து ராய்காட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சோம்நாத் கார்கே கூறுகையில், “ரசாயன ஆலையின் சேமிப்பு தொட்டியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் ரசாயன சேமிப்புத் தொட்டியில் பணிபுரிந்த 2 ஊழியர்கள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரசாயான சேமிப்புத் தொட்டியின் அருகில் வேலை செய்து கொண்டிருந்த மேலும் 4 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்த தொழிலாளர்கள் ரோஹாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் தீயணைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.