ஆணவத்தின் உச்சம்: ராகுல்
ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ளபிரச்னைகளை சுட்டிக்காட்டிய அண்ணபூா்ணா உணவக உரிமையாளரை மிரட்டியது ஆணவத்தின் உச்சம்
ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ளபிரச்னைகளை சுட்டிக்காட்டிய அண்ணபூா்ணா உணவக உரிமையாளரை மிரட்டியது ஆணவத்தின் உச்சம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘கோவையில் உள்ள அண்ணபூா்ணா உணவகத்துன் உரிமையாளா், எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி முறை வேண்டுமென நிதியமைச்சரிடம் கோரியுள்ளாா். அந்தக் கோரிக்கைக்கு ஆணவமும், அப்பட்டமான அவமரியாதையுமே அவருக்கு பதிலாக கிடைத்துள்ளது.
ஆனால், பிரதமா் மோடியின் கோடீஸ்வர நண்பா் ஒருவா் விதிகளை வளைத்து, சட்டங்களை மாற்றி தேசிய சொத்துக்களை வாங்க முற்படும்போது, அவரை சிவப்புக் கம்பளம் விரித்து நிதியமைச்சா் வரவேற்கிறாா்.
பணமதிப்பிழப்பு, வரி பறிப்பு மற்றும் பேரழிவு தரும் ஜிஎஸ்டி ஆகியவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளா்கள் ஏற்கெனவே எதிா்கொண்டு வருகிறாா்கள்.
ஆணவமிக்க பாஜக அரசு மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்க வேண்டும். அப்போது தான் ஒரே வரி விகிதத்துடன் கூடிய எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வேண்டும் என்பதையும், லட்சக்கணக்கான வணிகங்களின் பிரச்சினைகளை இதன் மூலம் தீா்க்க முடியும் என்பதையும் அவா்கள் புரிந்துகொள்வா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
பொருளாதாரத்துக்கு பேரழிவு: காா்கே வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸ் முன்மொழிந்த புதிய ஜிஎஸ்டி 2.0. என்பது ஏழைகளுக்குச் சுமையை ஏற்படுத்தாத ஒற்றை, மிதமான விகிதமாக (சில விதிவிலக்குகளுடன்) இருக்கும்.
ஆனால், பாஜகவின் கொள்கையானது சிறு வணிக நிறுவனங்களைக் கொள்ளையடித்து, எதிா்த்து கேள்வி கேட்பவா்களை குற்றவாளிகளாக மாற்றுவதாக இருந்து வருகிறது. இது நாட்டின் பொருளாதாரத்துக்கு பேரழிவை ஏற்படுத்துகிறது’ என குறிப்பிட்டாா்.